Published : 12 Dec 2022 05:58 PM
Last Updated : 12 Dec 2022 05:58 PM
போபால்: “நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியைக் கொலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் என்ற நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, "சாதி, மத, மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்து, வரும் தேர்தலை மோடி முடித்துவிடுவார். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் ஆகியோர் ஆபத்தில் உள்ளனர். அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், மோடியைக் கொல்ல தயாராக இருங்கள்" என பேசி உள்ளார். அவரது பேச்சு வீடியோவாக பதிவாகி வைரலாகி வருகிறது.
ராஜா படேரியா மீது வழக்குப் பதிவு: இதையடுத்து ராஜா படேரியா மீது மத்தியப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பிறப்பித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நரோத்தம் மிஸ்ரா, "ராஜா படேரியாவின் பேச்சு, தற்போதைய காங்கிரஸ் மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அல்ல என்பதைக் காட்டுகிறது. இது இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் சிந்தனையால் பாதிக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ்" என விமர்சித்துள்ளார்.
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கருத்து: ராஜா படேரியாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், "பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் இதயங்களில் வாழ்கிறார். ஒட்டுமொத்த நாட்டின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருக்கிறார். தேர்தலில் அவரை எதிர்த்து காங்கிரசால் வெல்ல முடியாது. எனவேதான் அவர்கள் நரேந்திர மோடியின் மரணத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது சகிப்பின்மையின், வெறுப்பின் உச்சம். காங்கிரஸ் கட்சியின் உண்மையான எண்ணம் தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற பேச்சுகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்: ராஜா படேரியாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "மன ரீதியாக தான் ஆரோக்கியமாக இல்லை என ராஜா படேரியாவே கூறினாலும்கூட, இந்தக் குற்றத்தில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. அவருக்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நான் காந்தியவாதி: ராஜா படேரியாவின் அதே வீடியோவில், தனது முந்தைய பேச்சில் இருந்த தவறை புரிந்துகொண்டு அதைத் திருத்தும் விதமாக பேசி இருக்கிறார். மோடியை கொல்லத் தயாராக வேண்டும் என நான் கூறியது தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான். "நான் ஒரு காந்தியவாதி. அவரது அகிம்சை கொள்கையை பின்பற்றுபவன்" என குறிப்பிட்டுள்ளார். எனினும், அவரது பேச்சில் இருந்த சர்ச்சைக்குரிய பகுதி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT