Published : 12 Dec 2022 06:19 PM
Last Updated : 12 Dec 2022 06:19 PM
புதுடெல்லி: திமுக மக்களவைக் கழக துணைத் தலைவர் கனிமொழி எம்.பி இன்று தீப்பெட்டித் தொழிலாளர்களின் அவல நிலையை மக்களவையில் எழுப்பினார். இந்த தொழிலைக் காக்கும்படியும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.
இது குறித்து மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி பேசியது: ''தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் என்பது நூற்றாண்டைக் கடந்தது. ஏற்றுமதி துறையிலும் நம் நாட்டின் மிக முக்கியமானது இந்த தீப்பெட்டி தயாரிப்பு தொழில். ஆனால், சமீபகாலமாக தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலதன பொருட்கள் கடுமையாக விலையேற்றம் கண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ 40 ரூபாயாக இருந்த கார்ட்போர்டு 90 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான சிகப்பு பாஸ்பரஸ் 400 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரித்து விட்டது.
தீப்பெட்டி தயாரிப்பு தொழில் என்பது 14 மூலப் பொருட்களைச் சார்ந்துள்ளது. இந்த அனைத்து மூலப் பொருள்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டன. இதனால் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது மக்களவைத் தொகுதியான தூத்துக்குடியிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் பத்து லட்சம் பேருக்கு இந்த தொழில்தான் வேலைவாய்ப்பை அளிக்கிறது.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். பின்தங்கிய பகுதியான இங்கே இவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது இந்த தீப்பெட்டி தொழில் தான். ஒரு பக்கம் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இன்னொரு பக்கம், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் (நான் ரீஃபிளபிள்) லைட்டர்களின் சட்ட விரோத இறக்குமதி அதிகரித்துள்ளது. இதுவும் தீப்பெட்டி தொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாதிப்புகளோடு தீப்பெட்டி தொழில் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியும் தொழிலை கடுமையாக பாதித்திருக்கிறது. எங்கள் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இது குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியும் எந்த பதிலும் இல்லை. பல்வேறு திசைகளில் இருந்தும் தீப்பெட்டித் தொழில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் மீண்டும் எங்கள் கோரிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு சட்டவிரோத ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்ய வேண்டும், தீப்பெட்டி தொழிலுக்கு உதவும் வகையில் இத்தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், தீப்பெட்டி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...