Published : 12 Dec 2022 04:45 PM
Last Updated : 12 Dec 2022 04:45 PM
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ராகிங் குற்றத்தைக் கண்டுபிடிக்க கல்லூரி மாணவியாக அண்டர் கவரில் சென்ற பெண் போலீஸ், சம்பந்தப்பட்ட மாணவர்களை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளார்.
24 வயது நிரம்பிய ஷாலினி சவுஹான் இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் அண்டர் கவர் ஆபரேஷனில் ராகிங் மாணவர்களை அடையாளம் காணும்படி பணிக்கப்பட்டார். அவர் முதலாம் ஆண்டு மாணவி போல் கல்லூரிக்குள் நுழைந்தார். ஜீன்ஸ் டிஷர்ட் என நாகரிக உடை அணிந்து புத்தகப் பையுடன் உலா வந்த அவர் சக மாணவர்களுக்கு சந்தேகம் வராதபடி அவர் இந்த ஆபரேஷனில் ஈடுபட்டுள்ளார்.
இவரை தேசிப் காஸி, சத்யஜித் சவுஹான் என இரண்டு உயரதிகாரிகள் அவ்வப்போது தொடர்புகொண்டு வழிநடத்தியுள்ளனர். ஷாலினி அனைவருடனும் இனிமையாகப் பழகும் பெண்ணாக தன்னை காட்டிக் கொண்டார். அன்றாடம் அதிக நேரம் கேன்டீனில் செலவழித்துள்ளார். இதனால் அவரை கேன்டீனில் காணும் மாணவிகள், மாணவர்கள் அவருடன் நன்றாகப் பேசியுள்ளனர். இப்படி தொடர்ந்து பேசி வந்ததில் வழக்கமாக ராகிங்கில் ஈடுபடும் 11 சீனியர்களை அடையாளம் கண்டுள்ளார். மேலும், 5 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு வந்த ராகிங் புகாரில் ஈடுபட்ட குறிப்பிட்ட மாணவர்களையும் அவர் அடையாளம் கண்டார்.
இது குறித்து விசாரணை அதிகாரி சத்யஜித் கூறும்போது, "இந்த மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மோசமான ராகிங்குக்கு உள்ளானதாக எங்களுக்கு புகார் வந்தது. அதில் சில வாடஸ் அப் தகவலின் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ராகிங் நடந்த கட்டிடத்தின் புகைப்படங்கள் இருந்தன. ஆனாலும், வேறு எந்த உறுதியான தகவலும் இல்லை. நேரடி விசாரணையிலும் சீனியர் மாணவர்களுக்கு அஞ்சி ஜூனியர் மாணவர்கள் வாய் திறக்கவில்லை. இதனால், இதில் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில்தான் நாங்கள் ஷாலினியை அண்டர் கவரில் அனுப்பினோம். அவரும் வழக்கை எளிதாக தீர்த்துக் கொடுத்துள்ளார்" என்று பாராட்டினார்.
ராகிங் குற்றத்தை கண்டுபிடிக்க கல்லூரி மாணவியாக அண்டர் கவரில் சென்ற பெண் போலீஸ் ஷாலினியின் தந்தை காவல் துறையில் இருந்தார். 201-0ல் அவர் இறந்துவிட, 2011-ல் அவர் தாயாரும் இறந்தார். இந்நிலையில்தான் ஷாலினி காவல் துறையில் பணியாற்றுவது என்று முடிவெடுத்துள்ளார். அண்மையில் பணியில் சேர்ந்த அவருக்கு இந்தூரின் சன்யோகீதாகஞ் காவல் நிலையத்தில் பணி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இந்த அண்டர் கவர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT