Published : 12 Dec 2022 03:51 PM Last Updated : 12 Dec 2022 03:51 PM
ஆர்எஸ்எஸ் தொண்டர் முதல் குஜராத் முதல்வர் வரை: பூபேந்திர படேல் கடந்து வந்த அரசியல் பாதை
காந்திநகர்: குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள நிலையில், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்து தற்போது பார்ப்போம்.
அகமதாபாத்தில் 1962-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தவர் பூபேந்திர படேல். சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்த இவர், அகமதாபாத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார்.
பாஜகவில் இணைந்த இவர் 1995-ல் முதல்முறையாக மீம்நகர் நகரமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பொதுவாழ்வில் இவர் பெற்ற முதல் தேர்தல் வெற்றி இது. அப்போது இவர் நகரமன்ற நிலைக்குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
1999-2000 மற்றும் 2004-2006 காலகட்டங்களில் இவர் பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, 2008 மற்றும் 2010ல் அகமதாபாத் மாநகராட்சி பள்ளிகளுக்கான வாரிய துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 2010 முதல் 2015 வரை அகமதாபாத் மாநகராட்சியின் தால்தேஜ் வார்டு உறுப்பினராக இருந்துள்ளார். அதோடு, இந்தக் காலகட்டத்தில் அகமதாபாத் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். 2015-ல் அகமதாபாத் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராக பூபேந்திர படேல் இருந்துள்ளார்.
2017-ல் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்லோடியா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் பூபேந்திர படேல். இவர் பெற்ற வாக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம். அப்போது முதல்வராக பொறுப்பேற்றவர் விஜய் ரூபானி.
முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி விலகியதை அடுத்து, 2021 செப்டம்பர் 13ம் தேதி முதல்முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர படேல்.
சுமார் ஒன்றேகால் ஆண்டுகள் முதல்வராக இருந்த நிலையில், இம்மாதம் (டிசம்பர்) இவரது தலைமையில் குஜராத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. கட்லோடியா தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட இவர் இம்முறை ஒரு லட்சத்து 91 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியதை அடுத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார் பூபேந்திர படேல்.
WRITE A COMMENT