Published : 11 Dec 2022 06:42 AM
Last Updated : 11 Dec 2022 06:42 AM

பொது சிவில் சட்டம் இயற்ற வலியுறுத்தி பாஜக எம்.பி. தனி நபர் மசோதா தாக்கல்

தமிழ்நாடு உட்பட 4 மாநிலத்தில் உள்ள 15 சாதியை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் இயற்றக் கோரி பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா, தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்டம் இயற்ற வலியுறுத்தி மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழுஅமைக்க வேண்டும் என அதில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. மத பாகுபாடு இல்லாமல் அனைத்து குடி மக்களின் தனிநபர் உரிமையை பாதுகாக்கும் வகையில் பொது சிவில் சட்டம் இருக்க வேண்டும் எனவும் அதில் வலுயுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ்,திரிணமூல், இடதுசாரிகள், சமாஜ்வாதி, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாநிலங்கள வைத் தலைவர் ஜெகதீப் தன்கர் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் மசோதாவை தாக்கல் செய்ய 63 பேர் ஆதரவளித்தனர், 23 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, “நமது அரசியல் சாசனம் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்வதற்கான உரிமையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளது. இதன்படிதான் கிரோடி லால் மீனா மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும்” என்றார்.

பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் இப்போது 735 சாதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மேலும் 15 சாதிகளை சேர்க்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதன்படி, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள 15 சாதிகளை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வகை செய்யும் 4 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இதன்மூலம் பழங்குடியினரின் வாக்குகளைக் கவர முடியும் என பாஜக கருதுகிறது. குறிப்பாக சத்தீஸ்கர், கர்நாடக மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டே இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x