Published : 11 Dec 2022 06:01 AM
Last Updated : 11 Dec 2022 06:01 AM

மகாராஷ்டிராவில் வந்தே பாரத் ரயில் உட்பட ரூ.75,000 கோடி மதிப்பு திட்டங்கள் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

பிரதமர் வருகையை முன்னிட்டு ஆய்வு செய்யும் துணை முதல்வர் பட்நாவிஸ்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுக்கு செல்கிறார். இன்று காலை 9.30 மணிக்கு மகாராஷ்டிராவின் நாக்பூர் ரயில் நிலையத்தில் ‘வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். காலை 10 மணிக்கு சுதந்திர பூங்கா மெட்ரோ நிலையத்தில் இருந்து கப்ரி மெட்ரோ நிலையத்துக்கு மெட்ரோ ரயிலில் அவர் பயணம் செய்கிறார்.

அங்கு நடைபெறும் விழாவில் நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டம் 1-ஐ நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கிறார். அப்போது நாக்பூர் மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். காலை 10.45 மணிக்கு நாக்பூர் மற்றும் ஷீரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கிறார். காலை 11.45 மணிக்கு நாக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர் நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அப்போது ரூ.1,500 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங் களை நாட்டுக்கு அவர் அர்ப் பணிக்கிறார். நாக்பூர் நதி மாசு கட்டுப்பாடு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். சந்திராபூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள், நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகலில் கோவாவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் அவர் திறந்துவைக்கிறார். பின்னர் 5.15 மணிக்கு கோவாவில் மோபா சர்வதேச விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x