Published : 10 Dec 2022 07:10 PM
Last Updated : 10 Dec 2022 07:10 PM
ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்வாகி உள்ளார். பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 12ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
அருதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டமன்றத் தலைவராக அதாவது முதல்வராக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, யார் முதல்வர் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார். எனினும் இது குறித்த அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படவில்லை.
காங்கிரஸ் தலைமையின் முடிவை அடுத்து, தலைநகர் ஷிம்லாவில் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், "இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா வீரபத்ர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்வாகி உள்ளார். பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறும்" என தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய சுக்விந்தர் சிங் சுகு, "இமாச்சலப் பிரதேச முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் அரசு இமாச்சலப் பிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இமாச்சலப் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம். துணை முதல்வராக தேர்வாகி உள்ள முகேஷ் அக்னிஹோத்ரியும் நானும் இணைந்து செயல்படுவோம். நான் எனது அரசியல் வாழ்க்கையை 17 வயதில் தொடங்கினேன். இதுவரை காங்கிரஸ் கட்சி எனக்கு அளித்த வாய்ப்புகள் எதையும் நான் மறக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார். முதல்வர் பதவிக்கு சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT