Published : 09 Dec 2022 06:20 AM
Last Updated : 09 Dec 2022 06:20 AM

நீண்ட இழுபறிக்குப் பின்னர் இமாச்சலில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் - முழு விவரம்

சிம்லாவில் நேற்று வெற்றியை கொண்டாடிய இமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங்.படம்: பிடிஐ

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

இங்குள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான ஜெய்ராம் தாக்குர், செராஜ் தொகுதியில் 52,076 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராமுக்கு 15,069 வாக்குகள் கிடைத்தன. தேர்தல் தோல்வியை ஏற்று முதல்வர் ஜெய்ராம் தாக்குர் நேற்று மாநில ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “தேர்தல் தோல்விக்கான கார ணங்களை ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுப்போம். சில விவகாரங்களால் தேர்தல் முடிவுகள்மாறியுள்ளன. பாஜக தலைமையிடம் நிலைமையை விவரிப்பேன்" என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “இமாச்சல் தேர்தலில் காங்கிரஸை வெற்றிபெற செய்த மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். கட்சி அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறை வேற்றப்படும்" என்றார்.

இதற்கிடையில், வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விமானத்தில் நேற்று பஞ்சாப் தலைநகர் சண்டிகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். மொகாலி நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகேஷ் அக்னிஹோத்ரி, சுக்விந்தர் சிங், பிரதிபா சிங், ஆஷா குமாரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 43.9 சதவீதம், பாஜகவுக்கு 43 சதவீதம், இதர கட்சிகளுக்கு 10.4 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. சுமார் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,000-க்கும் குறைவாக உள்ளது.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறும்போது, "தேர்தல் நேரத்தில் பாஜகவினர் சிலர் காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு தாவினர். மேலும்,பாஜகவை சேர்ந்த 21 பேர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர். பிரதமர் மோடி குஜராத் தேர்தலில் முழு கவனத்தையும் செலுத்தினார். இதுபோன்ற காரணங்களால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தன.

காங்கிரஸார் கூறும்போது, “கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சலில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சியின் தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதற்குப் பலன் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தன.

இமாச்சல பிரதேசத்தின் 68 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x