Published : 08 Dec 2022 10:21 PM
Last Updated : 08 Dec 2022 10:21 PM
பனஸ்கந்தா: குஜராத்தின் வத்காம் தொகுதியின் எம்எல்ஏவாக மீண்டும் வெற்றிவாகை சூட்டியுள்ளார் ஜிக்னேஷ் மேவானி.
பாஜக வேட்பாளர் மணிலால் ஜெதாபாய் வகேலாவை விட 4,922 வாக்குகள் அதிகம் பெற்று ஜிக்னேஷ் மேவானி வத்காம் தொகுதியை மீண்டும் கைப்பற்றினார். பாஜக வேட்பாளர் மணிலால் 89,837 வாக்குகள் பெற்ற நிலையில் ஜிக்னேஷ் 48 சதவீத வாக்குகளுடன் மொத்தம் 94,765 வாக்குகளைப் பெற்றார். குஜராத்தில் காங்கிரஸ் கடுமையான பின்னடைவை சந்தித்தாலும் அக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ் வெற்றிபெற்றுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 தேர்தலின் போது இதே தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றிகண்டவர் ஜிக்னேஷ். அப்போது அவருக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் இந்த தொகுதியில் வேட்பாளர் நிறுத்தாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்த தொகுதியில் 2012 முதல் 2017 வரை எம்எல்ஏவாக இருந்தது காங்கிரஸ் சார்பில் மணிலால் ஜெதாபாய்வே. ஜிக்னேஷுக்காக சீட் மறுக்க, மணிலால் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அதேநேரம், ஜிக்னேஷ் குஜராத் காங்கிரஸின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பாஜக சார்பில் மணிலால் வத்காம் தொகுதியில் ஜிக்னேஷை எதிர்த்து இந்தமுறை தேர்தலில் களம்கண்டார். கடுமையான போட்டி நிலவியபோதும் ஜிக்னேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த வெற்றி ஏன் முக்கியமானது?: ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் மூன்று இளம் தலைவர்களில் முக்கியமானவர். குஜராத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் முகமாக அறியப்படுபவர். ஊனா தாலுகாவில் மாட்டுத் தோலை உரித்த தலித் குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இவர் நடத்திய பேரணியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர்.
குஜராத்தில் பட்டியலினக் குடும்பத்தில் பிறந்தவரான ஜிக்னேஷ் மேவானி மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். உனாவில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக அவர் ஒருங்கிணைத்த பேரணி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. ராஷ்ட்ரிய தலித் அதிகாரி மஞ்ச் என்னும் அமைப்பைத் தொடங்கிப் பட்டியலின மக்களின் நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து குரலெழுப்பிவருகிறார். காங்கிரஸில் இணைந்த பிறகு இவருக்கு நிறைய நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. பிரதமர் மோடி குறித்து அவதூறாகவும் இரு மதப் பிரிவினரிடையே மத விரோதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்டதாக அஸ்ஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்டது உட்பட பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இம்முறை தேர்தலில் நின்றார்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வத்காம் தொகுதியானது முஸ்லிம் மற்றும் தலித் வாக்காளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி. 2.94 லட்சம் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்காக சுமார் 90,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். 44,000 தலித் வாக்காளர்களும், 15,000 ராஜபுத் வாக்காளர்களும் உள்ளனர்.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மணிலாலின் பிரச்சாரத்தையும், எதிர்தரப்பினர் கொடுத்த கடுமையான நெருக்கடிகளையும் மீறி ஜிக்னேஷ் பெற்றுள்ள வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வெற்றியை அடுத்து "எனக்கு நேர்மறையான தீர்ப்பை வழங்கியதற்காக வத்காம் தொகுதி மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த வெற்றி எனது தொகுதியினர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் நலனை மேலும் மேம்படுத்துவதற்கான பொறுப்பாக எனது வெற்றியை பார்க்கிறேன்" என்று ஜிக்னேஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT