Published : 08 Dec 2022 12:24 PM
Last Updated : 08 Dec 2022 12:24 PM
அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா வெற்றி முகம் கண்டுள்ளார்.
கவனம் ஈர்த்த ரிவாபா: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பலரது கவனத்தை ஈர்த்த வேட்பாளர்களில் ஒருவர் ரிவாபா ஜடேஜா. இந்திய கிரிகெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்தர ஜடேஜாவின் மனைவி இவர். 1990ல் பிறந்த இவர், மெகானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹரி சிங் சோலங்கியின் நெருங்கிய உறவினர். இவர் கடந்த 2019ல் பாஜகவில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்த ரிவாபா ஜடேஜா, ஜாம் நகர் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் நோக்கில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை இங்கு ஏற்கனவே செய்யத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்ததுபோலவே, ஜாம் நகர் வடக்குத் தொகுதி அவருக்கு வழங்கப்பட்டது.
போட்டி வேட்பாளர்கள்: ஜாம் நகர் வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிபேந்திர சிங் ஜடேஜாவும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஹிர் கர்ஷன்பாய் பர்பத்பாய் கர்முரும் போட்டியிட்டனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியதை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திர சிங் ஜடேஜா முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து எண்ணப்பட்ட வாக்குகளை அடுத்து ரிவாபா ஜடேஜா முன்னிலை வகிக்கத் தொடங்கினார். முற்பகல் 11.30 மணி நிலவரப்படி அவர் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 7 ஆயிரத்து 235 வாக்குகளுடன் ஆம் ஆத்மி வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், 5 ஆயிரத்து 288 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
பிரபல வேட்பாளர்கள் நிலவரம்:
12 மணி நிலவரம்: பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்: குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி இருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
27 ஆண்டுகளாக நீடிக்கும் பாஜக ஆட்சி: குஜராத்தில் 1995ல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 1995ல் அக்கட்சியின் கேசுபாய் படேல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அடுத்து நரேந்திர மோடி அதிகபட்சமாக 12 ஆண்டுகள் 227 நாட்கள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து ஆனந்தி பென் படேல் 2 ஆண்டுகள் 77 நாட்களும், விஜய் ரூபானி 5 ஆண்டுகள் 37 நாட்களும் முதல்வர்களாக இருந்துள்ளனர். பூபேந்திர படேல் சுமார் 15 மாதங்களாக முதல்வராக இருந்து வருகிறார்.
அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சி எது?: குஜராத்தில் தற்போது நடைபெற்றது 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 149 தொகுதிகளில் வெற்றி பெற்றதுதான் சாதனை அளவாக இருந்து வருகிறது. 1985ல் நடைபெற்ற 7வது சட்டப்பேரவைத் தேர்தலில்தான் இந்த வெற்றியை காங்கிரஸ் பெற்றது. பாஜகவைப் பொறுத்தவரை 2002ல் நடைபெற்ற 11வது சட்டப்பேரவைத் தேர்தலில் 127 இடங்களில் வெற்றி பெற்றதே இதுவரை அதிகபட்ச வெற்றியாக உள்ளது. கடந்த 2017ல் நடைபெற்ற 14வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...