Published : 08 Dec 2022 09:09 AM
Last Updated : 08 Dec 2022 09:09 AM
புதுடெல்லி: 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதேபோல், 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் இன்று நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சதார், கத்துவாலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல், ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர், பிகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவை அடுத்து நடைபெற்ற மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவரது மருமகளும், உத்தரப்பிரதசே முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் பாஜக, ரகுராஜ் சிங் சாக்யா என்பவரை களமிறக்கியது. மெயின்புரி தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டை என கருதப்படுவதால், இந்த தேர்தலில் டிம்பிள் யாதவின் வெற்றி அக்கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீதான மக்களின் தீர்ப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இதேபோல், சத்தீஸ்கர், ஒடிசா, பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அம்மாநில ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி அல்லது திருப்தியை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என கருதப்படுவதால் அவற்றின் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT