Published : 08 Dec 2022 05:51 AM
Last Updated : 08 Dec 2022 05:51 AM
புதுடெல்லி: நாடாளுமன்ற விவாதங்களில் இளம் எம்.பி.க்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இம்மாதம் 29-ம் தேதி வரை, இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: ஜி-20 அமைப்புக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது. உலக சமூகத்தில் இந்தியா ஒரு இடத்தைப் பிடித்த விதம், இந்தியாவுடனான எதிர்பார்ப்புகள் அதிகரித்த விதம் மற்றும் உலக அரங்கில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரித்து வரும் விதம் ஆகியவற்றால் ஜி20 தலைமை பொறுப்பை பெற்றுள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு.
குளிர்கால கூட்டத் தொடரை மிகவும் ஆக்கப்பூர்வமானதாக உருவாக்க அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். முதல்முறையாக நாடாளு
மன்றம் வந்துள்ள புதிய எம்.பி.க்கள் பேசுவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவைத் தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன். இளம் எம்.பி.க்களின் எதிர்காலம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நான் தனிப்பட்ட முறையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களு டனும் பேசும்போதெல்லாம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கியதாக சொல்கிறார்கள். நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதால், அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியவில்லை என இளம் எம்.பி.க்கள் புகார் கூறுகின்றனர். இது ஜனநாயகத்தின் பல்கலைக்கழகம். ஆனால் நமது இளம் எம்.பி.க்கள் பேசும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். நமது எம்.பி.க்களின் வலியை அனைத்துக் கட்சி தலைவர்களும் அவைத் தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் ஜி20 தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினேன். அது நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
எதிர்க்கட்சி கூட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான கூட்டு வியூகம் வகுக்க எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதையொட்டி நேற்று நாடாளு மன்றம் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இக்கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுதொடர்பாக ட்விட்டரில் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘‘நாடாளுமன்றம் ஜனநாயக விவாதத்தின் உறைவிடம். மக்களுக்கு அவசியமான அனைத்துப் பிரச்சினைகளை யும் வலுவாக எழுப்புவோம். சட்டப்பூர்வமான விஷயங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்’’ என்று தெரிவித்துள்ளார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT