Published : 08 Dec 2022 04:32 AM
Last Updated : 08 Dec 2022 04:32 AM
புதுடெல்லி: ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு பாஜகவிடம் இருந்து போன் வர ஆரம்பித்துவிட்டது என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 15 ஆண்டு கால பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மொத்தம் 250 வார்டு உறுப்பினர்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 104 வார்டுகளுடன் பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது. தேசிய அரசியலில் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, பாஜக தங்கள் கட்சியின் கவுன்சிலர்களை வளைக்கத் திட்டமிட்டு வருவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜகவின் ஆட்டம் தொடங்கிவிட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கவுன்சிலர்களுக்கு போன் வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் கவுன்சிலர்கள் யாரும் விற்கப்பட மாட்டார்கள். தொலைபேசி அழைப்புகளோ அல்லது யாரவது எங்களது கவுன்சிலர்களை சந்திக்க வந்தாலோ அதை பதிவு செய்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்" என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இவரின் குற்றச்சாட்டுக்கு காரணம், டெல்லி மேயர் தேர்வு. ஆம் ஆத்மி அதிக வார்டுகளை கைப்பற்றி இருந்தாலும் அங்கு மேயர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படலாம் என்பதால், கவுன்சிலர்கள் பேரம் பேசப்படலாம் என்ற நிலை உள்ளது. மேயர் தேர்வில் தேர்தல் நடக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியாயின் ட்வீட் அமைந்துள்ளது.
அண்டை மாநிலமான சண்டிகரில் அதிக இடம் வென்ற ஆம் ஆத்மியை விட குறைவான இடம் வென்ற பாஜக சார்பில் மேயர் இருப்பதை சுட்டிக்காட்டி டெல்லி மேயர் தேர்வுக்கு ஆம் ஆத்மியிடம் சவால் விடுத்துள்ளார். "கவுன்சிலர்கள் வாக்களிப்பதை பொறுத்தே டெல்லிக்கு ஒரு மேயரை தேர்ந்தெடுக்க முடியும். சண்டிகரில் பாஜக மேயர் இருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT