Published : 07 Dec 2022 05:45 PM
Last Updated : 07 Dec 2022 05:45 PM
புதுடெல்லி: அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அல் சிசி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி புதுடெல்லியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோ சிறப்பு விருந்தினராக / விருந்தினர்களாக பங்கேற்பார்கள். அந்த வகையில், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருப்பதாக மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அப்போது, வெளியுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விளக்கினார். அதன் விவரம்: "இந்திய வெளியுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் நான் விளக்கம் அளித்தேன். அதன் பிறகு, வெளியுறவுத் துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றி உள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. ஜி20 அமைப்பின் மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, ஏசியான் மாநாடு ஆகிய மாநாடுகளில் இந்தியா கலந்து கொண்டுள்ளது. ஐ.நா தலைவர் ஆன்டோனியோ கட்டரஸ் நம் நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், அது ஏற்படுத்தும் தாக்கம் விரிவடைந்து வருவதையும் இவை காட்டுகின்றன. சமர்கண்ட்டில் நடைபெற்ற மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் நிகழும் போரை சுட்டிக்காட்டி, இது போருக்கான காலம் அல்ல என கூறினார். அவரது இந்த கருத்து, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். குடியரசுத் தலைவராக அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்தது. இதேபோல், கம்போடியாவில் நடைபெற்ற ஏசியான் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார். அதோடு, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவிலும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT