Published : 04 Dec 2022 04:15 PM
Last Updated : 04 Dec 2022 04:15 PM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசியும் பாஜகவின் பி மற்றும் சி அணியாக செயல்படுகின்றனர் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், "சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இமாச்சல பிரதேச மக்கள் கேஜ்ரிவாலை நிராகரித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து குஜராத்திற்கு வந்தார். அங்கும் மக்கள் அவரை நிராகரித்தனர். தற்போது டெல்லி மாநகராட்சி தேர்தலில் இருக்கிறார். மிகவும் தெளிவாக அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒவைசியும் பாரதிய ஜனதா கட்சியின் பி மற்றும் சி அணியாக வேலை செய்கிறார்கள்.
குஜராத்தில் ஒரு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பு சிறப்பாகவே உள்ளது. குஜராத்தில் மக்கள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக காங்கிரஸ்மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள்.
அதேபோல இமாச்சல பிரதேசத்திலும் காங்கிரஸுக்கு நல்ல அறிகுறிகள் உள்ளன, இமாச்சல மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர், டிசம்பர் 8 ஆம் தேதி, இமாச்சலில் காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்படும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்தார்.
இமாச்சலில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1 அன்று நடைபெற்றது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இரு மாநில தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT