Published : 03 Dec 2022 05:38 PM
Last Updated : 03 Dec 2022 05:38 PM
மும்பை: ஆளுநர்களை நியமிப்பதில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: “மகாராஷ்டிராவின் மதிப்பு மிக்க அடையாளமாக திகழும் சத்ரபதி சிவாஜியையும், சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா பூலே, சாவித்ரி பூலே ஆகியோரை அவமதிக்கும் வகையில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசி இருக்கிறார். ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதி. எனவே, ஆளுநரை நியமிப்பதில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சட்டமியற்ற வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
மகாராஷ்டிராவையும் அதன் மதிப்பு மிக்க அடையாளங்களையும் அவமதிப்பவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்கான அறிவிப்பை சிவசேனா விரைவில் வெளியிடும். அப்போது நமது போராட்டம் மகாராஷ்டிராவோடு நின்றுவிடக்கூடாது.
கர்நாடகாவில் உள்ள பெல்காம் மகாராஷ்ட்டிராவுக்கு உரியது. அங்கு மராட்டி மொழி பேசும் மக்கள்தான் அதிகம். இதுபோல பல பகுதிகளை நாம் கர்நாடகாவிடம் இழந்துவிட்டோம். கர்நாடகாவுடனான எல்லைப் பிரச்சினை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மகாராஷ்டிர அமைச்சர்கள் சந்திரகாந்த் பாடீல், ஷம்புராஜ் தேசாய் ஆகியோர் பெல்காமிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களை கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி இருக்கிறார். இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைதி காக்கிறார்.
கர்நாடகாவிடம் இருந்து மகாராஷ்டிர பகுதிகளை மீட்க மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது எம்எல்ஏக்களும் அஸ்ஸாமின் காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்ள வேண்டும் (உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் அஸ்ஸாமுக்குச் சென்றனர் என்பதும் அப்போது காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்று ஏக்நாத் ஷிண்டே வழிபட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது). சிவசேனா கட்சி உடையவில்லை. ஒவ்வொரு நாளும் அது வலுவடைந்து வருகிறது” என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT