Published : 03 Dec 2022 04:34 PM
Last Updated : 03 Dec 2022 04:34 PM
புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம் பின்னணியில் சீன ஹேக்கர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் டெல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கம் தொடர்வதால் அங்கு பல்வேறு சேவைகள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சைபர் குற்றத்தடுப்பு தரப்பில், "எம்பரர் ட்ராகன் ஃப்ளை, ப்ரான்ஸ் ஸ்டார்லைட் போன்ற சீன ஹேக்கர் குழுக்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் குழுக்கள் பொதுவாகவே மருந்து நிறுவனங்களை குறிவைத்து ஹேக் செய்வது வழக்கம். இந்த இரண்டு ஹேக்கர்களை தாண்டியும் லைஃப் என்ற ஹேக்கர்கள் குழு மீது சந்தேகம் உள்ளது. வானாரென் (WannaRen) என்ற ரேன்ஸம்வேரை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கணிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரிலிருந்து நிறைய நோயாளிகளின் தரவுகளை எடுத்து அதனை டார்க் வெப் இணையத்திற்கு ஹேக்கர்கள் விற்பனை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஏராளமான அரசியல்வாதிகளின் மருத்துவ சிகிச்சை தரவுகளும் கசிந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. டெல்லி சைபர் க்ரைம், எய்ம்ஸ் நிர்வாகமும் இணைந்து சர்வரை மீண்டும் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயல்வதாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக எய்ம்ஸ் சர்வரை முடக்கியவர்கள் ரூ.200 கோடி பிணைத்தொகை கேட்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதனை டெல்லி போலீஸ் திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், எய்மஸ் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரில் சைபர் தீவிரவாதம் மற்றும் பணம் கேட்டு மிரட்டல் என்றே குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
7வது நாளாக தொடரும் முடக்கம்: விசாரணைகள் ஒருபுறம் இருக்க டெல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கம் 7-வது நாளாக நீடிக்கிறது. இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங், நேஷனல் இன்ஃபர்மேடிக்ஸ் சென்டர் என பல முன்னணி நுண்ணறிவு அமைப்புகள் சர்வர் முடக்கத்தை சரி செய்ய முயன்று வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி 1200 கணினிகளும் 20 சர்வர்களும் மீட்கப்பட்டன. இந்தப் பணி இன்னும் சில நாட்கள் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக நேற்று மத்திய ஐடி துறை இணைய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம், "சர்வர் முடக்கம் முழுமையமாக சரி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியில் சில திட்டமிட்டு குற்றஞ்செய்யும் சதி குழுக்கள் தலையீடு இருக்கும் என சந்தேகிக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT