Published : 03 Dec 2022 02:16 PM
Last Updated : 03 Dec 2022 02:16 PM

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ விமர்சனம் எதிரொலி | இந்தியர்களிடம் யூத எதிர்ப்பு மனநிலை அதிகரிப்பு: இஸ்ரேல் தூதர்

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன்

புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாதவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை கடுமையாக விமர்சித்ததை அடுத்து, இந்தியர்களிடம் யூதர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு நடுவர்களின் தலைவராக இஸ்ரேலிய திரைப்பட இயக்குநர் நாதவ் லாபிட் அழைக்கப்பட்டிருந்தார். நிறைவுநாள் நிகழ்ச்சியில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், இந்தப் படம் இழிவானதாகவும், பிரச்சாரத்தன்மை கொண்டதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவரது இந்த விமர்சனத்திற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர் பல பத்தாண்டுகளாக அனுபவித்து வந்த வலிகளையும், பயங்கரவாத அமைப்புகளின் வன்முறை காரணமாக அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதையும் படம் பேசுவதாகவும், அதுவும் அவர்கள் அனுபவித்த வேதனைகளை இந்தப் படம் முழுயைாக சொல்லிவிடவில்லை என்று சொல்லிவிடவும் முடியாது என்றும் கூறி பல்வேறு தரப்பினரும் நாதவ் லாபிட்டின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாதன் லாபிட்டின் விமர்சனத்திற்கு இஸ்ரேல் அரசும் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நாதன் லாபிட்டுக்கு திறந்த மடல் எழுதிய இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நார் கிலோன், இவ்வாறு விமர்சித்ததற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்று கடுமையாக சாடி இருந்தார். ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்தக் கடிதத்தை அனைவரும் அறியும் வண்ணம் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, தனது விமர்சனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக நாதவ் லாபிட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை அடுத்து யூதர்களுக்கு எதிராக இந்தியர்கள் கருத்துகளை பதிவிடுவது அதிகரித்துள்ளதாகவும், யூத எதிர்ப்பு கருத்துகளை பலரும் ட்விட்டர் வாயிலாக தனக்கு அனுப்பி வருவதாகவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் தெரிவித்துள்ளார்.

தனக்கு வந்த பல கருத்துகளில் ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், உங்களைப் போன்ற எச்சங்களை எரித்துக்கொன்ற ஹிட்லர் மிகச் சிறந்த மனிதர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவில் இருந்து யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற எதிர்ப்புக் கருத்துகள் அதிகம் தனக்கு அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x