Published : 03 Dec 2022 01:19 PM
Last Updated : 03 Dec 2022 01:19 PM

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங். பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு

குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீடு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்; இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள பூபதி நகர் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ராஜ்குமார் மன்னா என்பவரது வீட்டில் இன்று அதிகாலை இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் பூர்விக வீட்டின் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கான்டாய் எனும் நகரம். இந்த நகரத்தில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பேனர்ஜி பங்கேற்க இருந்தார். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. குண்டுவெடிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில்தான் குண்டுவெடித்துள்ளதாகவும், அவர் வெடிகுண்டை தயாரித்துக்கொண்டிருந்தபோது அது வெடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் ராஜ்குமார் மன்னாவும், மேலும் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேலும், வெடிகுண்டு தயாரிப்பது வெற்றிகரமான குடிசைத் தொழிலாக மேற்கு வங்கத்தில் உருவெடுத்திருப்பதாகவும் இதை தயாரிப்பவர்கள் பெரும்பாலும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள்தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுவேந்து அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து காவல் துறை தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தகவல் தெரிவிப்பதை காவல் துறை தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு பாஜகவே காரணம் என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், இந்த குண்டுவெடிப்புக்கு உள்ளூர் பாஜகவினரே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். அபிஷேக் பானர்ஜியின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில், அதனை சீர்குலைக்கும் நோக்கில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x