Published : 03 Dec 2022 12:08 PM
Last Updated : 03 Dec 2022 12:08 PM
புதுடெல்லி: கொலீஜியம் மிகுந்த வெளிப்படைத்தன்மை கொண்ட அமைப்பு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பு கொலீஜியம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில், மூத்த நீதிபதிகள் 4 பேர் இடம் பெறுவர். இக்குழுவே கொலீஜியம் என அழைக்கப்படுகிறது.
இந்த கொலீஜியம் முறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீதிபதிகளே சக நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி வருகிறார். நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.
இதனிடையே, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எழுதிய புத்தகத்தில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில், அப்போதைய ராஜஸ்தான் தலைமை நீதிபதியாக இருந்த பிரதீப் நந்ரஜோக், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜேந்திர மேனன் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தகவல் முன்கூட்டியே வெளியானதை அடுத்து, 2019, ஜனவரி 10ம் தேதி மீண்டும் கூடிய புதிய கொலீஜியம் கூட்டத்தில் முந்தைய முடிவை நிறுத்திவைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 2018ல் நடந்த கொலீஜியம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி அஞ்சலி பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, சி.டி. ரவிகுமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொலிஜியம் நடைமுறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதை சிதைக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தினர். மேலும், நாங்கள்(கொலீஜியம்) மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்ட அமைப்பு என்று தெரிவித்த நீதிபதிகள், கொலிஜியத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் அதுகுறித்து பொதுவெளியில் தகவல்களை தெரிவிப்பது தற்போது புதிய ஃபேஷனாகிவிட்டது என்றும் குறிப்பிட்டனர்.
வழக்கு விசாரணையின்போது மனுதாரரான அஞ்சலி பரத்வாஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க கொலீஜியம் கடமைப்பட்டதா என்பதுதான் தற்போதைய கேள்வி என குறிப்பிட்டார். கொலீஜியத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளக் கூடாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றமும் கூறி இருப்பதை சுட்டிக்காட்டிய பிரசாந்த் பூஷண், ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் பின்வாங்குவதாகவும் விமர்சித்தார். தலைமை நீதிபதிக்கும் அரசுக்கும் இடையே நடந்த கடிதத் தொடர்பு குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி ஷா, அந்த கொலீஜியம் கூட்டத்தில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார். கொலீஜியத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ன சொன்னார்களோ அதன் மீது கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT