Published : 03 Dec 2022 05:08 AM
Last Updated : 03 Dec 2022 05:08 AM
புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தேசிய பல் மருத்துவ ஆணையம், தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையம் உருவாக்குதல் உள்ளிட்டவை தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும். நடப்பாண்டில் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தொடங்க சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 29-ம் தேதிவரை 23 நாட்கள் நடைபெறும்.இந்தக் கூட்டத் தொடர் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும். இந்த அமர்வுகளின்போது நாடாளுமன்ற அலுவல் மற்றும் பிற விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தக் கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1948-ல் இயற்றப்பட்ட பல் மருத்துவர்கள் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா, 1947-ல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையத்தை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மேலும், பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல், தேர்தல் செயல்முறையைச் சீர்திருத்துதல் உள்ளிட்ட நோக்கத்துடன் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, கன்டோன்மென்ட் மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா, கடலோர மீன் வளர்ப்பு ஆணைய மசோதாஉள்ளிட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment