Last Updated : 01 Dec, 2016 03:17 PM

 

Published : 01 Dec 2016 03:17 PM
Last Updated : 01 Dec 2016 03:17 PM

344 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

எஃப்.டி.சி மருந்துகள் என்று அழைக்கப்படும் விக்ஸ் ஆக்சன் 500 உள்ளிட்ட 344 மருந்துகளை தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் வியாழனன்று ரத்து செய்தது.

புகழ்பெற்ற இருமல் மருந்தான கோரெக்ஸ், விக்ஸ் ஆக்சன் 500, டிகோல்ட் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு தடை விதித்திருந்த மத்திய அரசின் உத்தரவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

மத்திய அரசின் இந்த உத்தரவை மருந்து உற்பத்தி நிறுவனங்களான ஃபைசர், கிளென்மார்க், புராக்டர் அண்ட் காம்பிள், சிப்ளா மற்றும் சில தன்னார்வ குழுக்கள் எதிர்த்து மனு செய்திருந்தன.

எஃப்.டி.சி. என்பது பிக்சட் டோஸ் காம்பினேஷன் ஆகும். அதாவது ஒரே டோஸ் மருந்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள் கலந்திருப்பது, இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த 344 மருந்துகளுக்கும் தடை விதித்திருந்தது.

கூட்டு மருந்துகள் விரைவில் வேலை செய்கின்றன என்றும் குழந்தைகள் மருத்துவத்தில் இது திறம்பட செயலாற்றுகிறது என்றும் இதற்கு மருத்துவர்கள் மத்தியில் ஆதரவும் இருந்து வந்தது. ஆனால் கூட்டுமருந்துகள் என்ற கருத்தாக்கத்தை சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி சம்பந்தா சம்பந்தமில்லாத மருந்துகளை ஒரே டோசில் கலந்து அறிவுக்குகந்ததாக கருதப்பட முடியாத சில கூட்டு மருந்துகளை கொண்டு வந்தன. இதனை தடை செய்ய வேண்டுமென்று நீண்ட நாட்களாக சில அமைப்புகள் கோரி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 344 கூட்டுமருந்துகளுக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x