Published : 01 Dec 2022 04:00 PM
Last Updated : 01 Dec 2022 04:00 PM
கலோல்: தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் தன்னை ‘ராவணன், ராட்சசன், ஹிட்லர்...’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னை விமர்சிப்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப் பெரிய போட்டி நிலவுவதாகத் தெரிவித்தார்.
குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் என்ற இடத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: “நான் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். அவருக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை சொல்லக்கூடியவர் அவர். அதனால்தான் அவர் என்னை ராவணனோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். குஜராத் ராம பக்தர்களின் பூமி என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாது.
காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. இருந்திருந்தால் அவர்கள் இந்த அளவுக்குச் சென்றிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு குடும்பத்தின் மீதுதான் நம்பிக்கை. அந்தக் குடும்பத்தை மகிழ்விக்க அவர்கள் எதையும் செய்வார்கள். அந்தக் குடும்பம்தான் அவர்களுக்கு எல்லாம்; ஜனநாயகம் அல்ல. அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.
ஒரு நாயின் மரணத்தைப் போன்று எனது மரணம் இருக்கும் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். வேறொரு காங்கிரஸ் தலைவர் பேசும்போது, ஹிட்லருக்கு நேர்ந்த மரணத்தைப் போன்று எனக்கு மரணம் ஏற்படும் என சாபமிட்டார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மோடியை நானே கொலை செய்வேன் என ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். சிலர் என்னை ராவணன் என்கிறார்கள்; ராட்சசன் என்கிறார்கள். சிலர் என்னை கரப்பான்பூச்சி என்றும் குறிப்பிடுகிறார்கள். என்னை யார் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப் பெரிய போட்டியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அகமதாபாத் நகரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சாலையில் வாகனத்தில் பயணித்தவாறு அவர் வாக்குகளை கோரினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறார். குறிப்பாக, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டன. மின்சார பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மாணவர்களின் இடைநிற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.
இம்முறை பாஜகவின் தேர்தல் அறிக்கையில், தீவிரவாத மனநிலையுடன் இருக்கக்கூடிய அடிப்படைவாதிகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்காக தீவிரவாத தடுப்புப் பிரிவு (Anti-radical Cell) உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான, முற்போக்கான வாக்குறுதி. இந்தப் பிரிவு அடிப்படைவாதத்தைக் கட்டுப்படுத்தும். இதன்மூலம் பயங்கரவாதத்தையும் கலவரங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் நரேந்திர மோடியை கடும் சொற்களால் விமர்சிக்கிறதோ அப்போதெல்லாம், குஜராத் மக்கள் தங்கள் வாக்குப் பெட்டி மூலம் அக்கட்சிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இம்முறையும் அப்படி ஒரு பதிலடியை குஜராத் மக்கள் அளிப்பார்கள்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT