Published : 01 Dec 2022 08:19 AM
Last Updated : 01 Dec 2022 08:19 AM

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் | முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்; களத்தில் 788 வேட்பாளர்கள் 

குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக முதல்முறை வாக்களிப்போர் ஆர்வத்துடன் வாக்களிக்க வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இன்று தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில், பழங்குடியினருக்கு 14, தலித்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 70 பேர்பெண்கள், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். இதில் நட்சத்திர வேட்பாளர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். குறிப்பாக ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இன்று களம் காண்கிறார். ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி கம்பாலி தொகுதியில் களம் காண்கிறார்.

2.39 கோடி வாக்காளர்கள்: இன்றைய தேர்தலுக்காக மொத்தம் 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் ஒரு கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். ஒரு கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

மும்முனைப் போட்டி: குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜக, 7-வது முறையும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிஇந்த முறை தீவிரமாகக் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் வரும் 3-ம் தேதியுடன் ஓய்கிறது.

டிச.8ல் தேர்தல் முடிவு: இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இப்போதைய பாஜக எம்எல்ஏ-க்கள் 42 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால்அதிருப்தி அடைந்த 19 பேர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர். இதில் 9 பேர் முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • M
    M.vijayakumar

    150%Bharathi janatha win.

 
x
News Hub
Icon