Published : 29 Nov 2022 03:27 PM
Last Updated : 29 Nov 2022 03:27 PM
புதுடெல்லி: குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராமாயணத்தில் வரும் ராவணன் உடன் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்துவிட்டது’ பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு உள்ள பணிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அவர் எப்போதும் தேர்தல் பிரச்சாரத்திலேயே இருப்பதாக கார்கே விமர்சித்தார். அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அவர் பிரச்சாரத்திற்கு வந்துவிடுகிறார் என கார்கே குற்றம்சாட்டினார்.
"நீங்கள் வேறு யாரையும் பார்க்க வேண்டியதில்லை. என் முகத்தைப் பார்த்து வாக்களியுங்கள்" என தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி கூறுவதை சுட்டிக்காட்டிய மல்லிகார்ஜுன கார்கே, உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது என கேள்வி எழுப்பினார். "உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் உள்ளதா?" என்றும் கார்கே கேள்வி எழுப்பினார்.
மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த ஒப்பீடுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் மகனை (பிரதமர் நரேந்திர மோடியை) காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்மூலம் பிரமதர் மோடியை மட்டும் காங்கிரஸ் அவமதிக்கவில்லை என்றும், பிரதமரோடு, குஜராத்தையும், ஒவ்வொரு குஜராத்திகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் இதுபோன்ற பேச்சு, அக்கட்சியின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுவதாகவும் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT