Published : 29 Nov 2022 06:53 AM
Last Updated : 29 Nov 2022 06:53 AM
புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் கேதா மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது.
நாட்டில் ஒரு காலத்தில் தீவிரவாதம் செழிப்புடன் இருந்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சி அதை வாக்கு வங்கி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்தது. காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்து கொண்ட பிற கட்சிகளுக்கு எதிராக முழு நாடும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டில் வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும்.
2008-ம் ஆண்டு டெல்லியில் நடந்த பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்காக காங்கிரஸ் தலைமை கண்ணீர் சிந்தியது. அதே ஆண்டு மும்பையில் நடந்த 26/11 தாக்குதல்கள், அகமதாபாத் மற்றும் சூரத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் பலரைக் கொன்றன. இதற்கு காரணமான தீவிரவாத சக்திகளை, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு எதிர்த்து போராட வேண்டியிருந்தது.
ஸ்லீப்பர் செல்களை உடைப்பதில் பாஜக அரசு சாமர்த்தியமாக செயல்பட்டது. தீவிரவாதிகளை விடுவிப்பதில் மத்தியில் இருந்த அப்போதைய காங்கிரஸ் அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது. நாங்கள் அவ்வாறு இல்லாமல் தீவிரவாதிகளை பிடித்து, அவர்களின் வலைப்பின்னலை பின்தொடர்கிறோம்.
ஒருசில சிறிய கட்சிகளும் அதிகார மோகத்தில் குறுக்குவழி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலை நாடுகின்றன. மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் சிலவற்றை நாடு கண்டபோதும் ஒரு சிலர் புண்படக் கூடாது என்பதற்காக இந்தக் கட்சிகள் வாய் திறக்கவில்லை.
மோசமான விஷயம் என்ன வென்றால், தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட போது, இந்தக் கட்சிகள் நீதிமன்றங்களுக்குள் பின்வாசல் வழியாக நுழைந்தன. அவற்றின் நிர்வாகிகள் சிலர் தீவிரவாதிகளுக்காக வாதிட்டு அவர்களை பாதுகாத்தனர். துல்லிய தாக்குதல் மூலம் நாங்கள் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களை அழித்தோம். ஆனால் காங்கிரஸும் மற்ற கட்சிகளும் இந்த நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கியதன் மூலம் ஆயுதப் படைகளின் வீரத்தை சந்தேகித்தன.
தீவிரவாதத்தில் இருந்து குஜராத் மாநிலத்தை பாதுகாத்துள்ளோம். குஜராத்தில் ஊரடங்கு உத்தரவை கூட கண்டிராத தற்போதைய தலைமுறையை குண்டுவெடிப்பிலிருந்து பாதுகாக்க விரும்புகிறோம். குஜராத்தில் உள்ள இரட்டை இன்ஜின் அரசால் மட்டுமே இதை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரதமர் மகிழ்ச்சி
மத்திய மீன்வளம், கால்நடைகள் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபாலா தனது ட்விட்டர் பதிவில், “கடந்த எட்டு ஆண்டுகளில் பால் உற்பத்தி 83 மில்லியன் டன் அதிகரித்துள்ளது. முன்னதாக 63 ஆண்டுகளில் பால் உற்பத்தி 121 மில்லியன் டன் மட்டுமே அதிகரித்தது" என்று கூறியுள்ளார்.
இதனை பிரதமர் மோடி, டேக் செய்து வெளியிட்டுள்ள பதிவில், “இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது பெண்கள் சக்தியை மேலும் வலுப்படுத்த பால்வளத் துறை ஒரு துடிப்பான ஒரு சிறந்த வழியாகும்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT