Published : 29 Nov 2022 07:29 AM
Last Updated : 29 Nov 2022 07:29 AM

மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் அடங்காது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

கோப்புப்படம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, கட்டாய மத மாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது. நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. இது, தேசிய அளவிலான பிரச்சினையாக உள்ளது.

பில்லி, சூனியம், மூட நம்பிக்கை ஆகியவற்றின் வாயிலாகவும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த வாரம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்சினையாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதமாற்றம் செய்வதை தடுக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை, தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அந்த ஆவணத்தில் மத்திய அரசு கூறியிருப்பதாவது. மதச் சுதந்திரம் என்ற பெயரில் வேற்று மதத்தினரை மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையி ல்அடங்காது. மேலும் இது மோசடி, ஏமாற்றுதல், வற்புறுத்தல் அல்லது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுவதற்கான உரிமையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு பரிசீலிக்கும். மனுதாரர் கூறியுள்ள பிரச்சினையின் தீவிரத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x