Published : 29 Nov 2022 05:42 AM
Last Updated : 29 Nov 2022 05:42 AM

குஜராத்தில் டிச.1-ல் முதல்கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

கோப்புப்படம்

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.1-ல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முதல்கட்டத் தேர்தலில் மொத்தமுள்ள 89 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆம் ஆத்மி 88, பகுஜன் சமாஜ் 57, ஏஐஎம்ஐஎம் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஒட்டுமொத்தமாக 70 பெண்கள் உள்ளிட்ட 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜக வேட்பாளர்கள் 89 பேரில் 79 பேர் கோடீஸ்வரர்கள். அதேபோல, காங்கிரஸில் 65 பேர், ஆம் ஆத்மி கட்சியில் 33 பேர் கோடீஸ்வரர்கள். மேலும், மொத்த வேட்பாளர்களில் 21 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

ஆம் ஆத்மி வேட்பாளர்களில் 36 சதவீதம் பேர், காங்கிரஸில் 35 சதவீதம் பேர், பாஜக-வில் 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் சவுராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் பகுதிகளில் அடங்கியுள்ளன. 89 தொகுதிகளில் மணிநகர், மோர்பி, கோத்ரா உள்ளிட்ட 25 தொகுதிகள் விஐபி தொகுதிகளாகக் கருதப்படுகின்றன. இங்கு பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தில் 1995 முதல் தொடர்ந்து 6 முறை ஆட்சிஅமைத்துள்ள பாஜக, 7-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த கால தேர்தல்களைவிட, பிரதமர் மோடி அதிக நாட்கள் முகாமிட்டு, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜக தேர்தல் அறிக்கையில், 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், 100 இடங்களில் ரூ.5-க்கு உணவு, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் கடன்தள்ளுபடி, மாதத்துக்கு 300 யூனிட்இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் அமல்படுத்தியுள்ள அனைத்து மானியத் திட்டங்களும் குஜராத்திலும் அமல்படுத்தப்படும். கல்வி, சுகாதாரச் சேவைகள் இலவசமாக வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்திருக்கிறது.

முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. டிச. 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிச. 5-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 77 இடங்களைக் கைப்பற்றியது. இந்த முறை ஆம் ஆத்மியும் தீவிரமாகப் போட்டியிடுவதால், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

பாஜக-வுக்கு 117 தொகுதிகள்

இந்நிலையில், இண்டியா டிவி, மேட்ரிஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், பாஜக 117 தொகுதிகளைக் கைப்பற்றும், காங்கிரஸுக்கு 59, ஆம் ஆத்மிக்கு 4, இதர கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு 55 சதவீதம், காங்கிரஸுக்கு 22, ஆம் ஆத்மிக்கு 15, இதர கட்சிகளுக்கு 3 சதவீதம் பேர் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியைத் தீர்மானிப்பது யார்?

குஜராத் மக்கள் தொகையில் கோலி சமுதாயத்தினர் 24 சதவீதம் உள்ளனர். அந்த மாநிலத்தின் 84 தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இவர்கள் விளங்குகின்றனர்.

இதற்கு அடுத்து படேல் சமுதாயத்தினர் 12 சதவீதம் பேர் உள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் படேல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர, பழங்குடியினர் 14.75 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 6.74 சதவீதம், பொதுப் பிரிவினர் 26 சதவீதம் பேர் உள்ளனர். மேலும், குஜராத் மக்கள் தொகையில் 9.67 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில், அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் சரிசமமாக இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x