Published : 29 Nov 2022 08:57 AM
Last Updated : 29 Nov 2022 08:57 AM
புதுடெல்லி: தெற்காசியாவின் மிகப்பெரிய சிறையாக டெல்லி திகார் சிறை உள்ளது. டெல்லியின் ஜனக்புரி அருகிலுள்ள திகார் கிராமத்தில் இது அமைந்துள்ளது. இதன் உள்ளே 9 மத்திய சிறைகள் உள்ளன. மேலும் 2 வளாகங்கள் தலா 6 சிறைகளுடன் டெல்லியின் ரோஹினி மற்றும் மண்டோலி பகுதியில் உள்ளன. இவை அனைத்தும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி சிறை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
திகார் சிறையில் முன்னாள் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி, லாலு உட்பட தற்போதைய அரசியல் தலைவர்கள் பலரும் அடைக்கப்பட்டிருந்தனர். பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி சுகாதார அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் தற்போது இங்கு அடைக்கப்பட்டுள்ளார். சிறை அறையில் அவருக்கு மற்றொரு நபர் மசாஜ் செய்யும் காட்சிகள் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் திகார் சிறையில் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. சில சம்பவங்கள் திகிலூட்டியதும் உண்டு.
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் சுமார் 15 கிரிமினல் வழக்குகளில் 2017-ல் சிக்கி திகார் சிறையிலிருப்பவர், கர்நாடகாவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். இவர் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன.
தமிழக அரசியல் தலைவர் டிடிவி தினகரன் சார்பில் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாகவும் சுகேஷ் மீது வழக்கு உள்ளது. திகார் சிறையின் ரோஹினி வளாகத்தில் சுகேஷ் அடைக்கப்பட்ட பின்பும் அவரது மோசடி நின்றபாடில்லை. சிறை அதிகாரிகள் உதவியுடன் இரண்டு கைப்பேசிகளில் பேசி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். கடந்த வருடம் வெளியான இந்த சம்பவத்திற்கு உதவியதாக 81 சிறை அலுவலர்கள் வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
இங்குள்ள சிறை எண் 1-ல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போது சந்தீப் கோயல் என்ற கைதி, தன்னிடமிருந்த கைப்பேசியை விழுங்கிவிட்டார். பிறகு அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் உண்மை வெளியானது. இதையடுத்து மருத்துவமனையில் கோயல் அனுமதிக்கப்பட்டு கைப்பேசி அகற்றப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை மிஞ்சும் வகையில் கொடூரக் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களும் திகாருக்கு புதிதல்ல.
கடந்த வருடம் செப்டம்பரில் சிறை எண் 3-ல், கைதிகளில் இரண்டு தாதா குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரண்டு குழுக்களிடமும் கூர்மையான ஆயுதங்கள் இருந்தன. இவை எப்படி கிடைத்திருக்கும் என்ற கேள்வியை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்டில் சிறை எண் 5-ல் 2 கைதிகள் இடையிலான மோதலில் சமீர் கான் என்ற கைதி உயிரிழந்தார்.
இங்கு நடைபெறும் குற்றச் சம்பவங்களில் அதிகாரிகளும் சிக்கியது உண்டு. இங்கு சிறை எண் 3-ல் அடைக்கப்பட்டிருந்த டெல்லி தாதா அங்கித் குஜ்ஜர், ஒரு மாதம் முன்பு கொலை செய்யப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன் சிறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்ததாகவும். அதைத் தொடர்ந்தே அவர் கொல்லப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இவரது தாய் அளித்த புகாரின் பேரில் இந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் நரேந்தர் மீனா எனும் டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளார். இதுபோன்ற சம்பவங்களை அடுத்து, சிறை முழுவதும் சுமார் 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திகார் சிறைக்கான வார்டன், துணை வார்டன் ஆள்சேர்ப்பிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இப்பணியில் கடந்த 2019 முதல் சேர்ந்தவர்களை அடையாளம் காண, டெல்லி சபார்டினேட் தேர்வு வாரியம் சார்பில் கைரேகை பதிவுகள் சோதிக்கப்பட்டன. இதில் 47 பேர் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
கரோனா பரவல் காலத்தில் பரோலில் சென்ற சுமார் 3,400 கைதிகள் சிறைக்கு திரும்பவில்லை எனப் புகார் எழுந்தது. இப்புகார்களுக்கு மாறாக இங்கு அடைக்கப்படும் கைதிகளுக்கு யோகா, விளையாட்டு, இசை உள்ளிட்ட பயிற்சிகள், கல்வி, சுயதொழில் என அனைத்து வகை மறுவாழ்வும் கிடைத்து விடுகிறது. இங்கு கைதிகளில் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்களும் உண்டு. முன்னாள் ஆளுநரும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண்பேடி இங்கு டிஐஜியாக இருந்தபோது பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதனால் அதன் ஒரு வளாகத்தின் பெயர் திகார் ஆசிரமம் எனவும் மாறியது. இருப்பினும், திகார் சிறை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
திகார் சிறையின் கைதிகள் கொள்ளளவு 10,026 என இருந்தும் அதில், 20,000 கைதிகள் உள்ளனர். 2,300 பணியாளர்கள், 2,500 பாதுகாவலர்கள் உள்ளனர். திகாரின் வெளிப்புறம் மற்றும் வாயில்களின் பாதுகாப்பில் தமிழக காவல் துறை சார்பில் சிறப்பு பிரிவு பணி அமர்த்தப்பட்டுள்ளது.
சிறையினுள் இருப்பவர்கள் மீது எழும் புகார்களில் சிக்காமல் தமிழக காவல் துறையினர் பாராட்டு பெற்று வருகின்றனர். ஒரு எஸ்.பி. தலைமையில் சுமார் 2,000 காவலர்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT