Published : 26 Nov 2022 05:28 PM
Last Updated : 26 Nov 2022 05:28 PM
புதுடெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பையில் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மும்பையில் 12 இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 166 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு இது குறித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மும்பை பயங்கரவாத தாக்குதலில் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்தார். இந்த நாளை ஒட்டுமொத்த நாடும் இன்று நினைவுகூர்வதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருந்த உண்மை குற்றவாளிகள் ஒருபோதும் தப்ப முடியாது என தெரிவித்தார். அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான பணிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா பாதுகாப்பு அவையின் கீழ் இயங்கும் பயங்கரவாத தடுப்புக் குழுவின் கூட்டம் இந்தியா தலைமையில் கடந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது, பயங்கரவாத தாக்குதல் நடத்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் உறுப்பு நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT