Published : 26 Nov 2022 02:55 PM
Last Updated : 26 Nov 2022 02:55 PM

சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி54 | வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஓசன்சாட்

விண்ணில் சீறிப் பாயந்த பிஎஸ்எல்வி-சி54

ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 17 நிமிடத்தில் அதிலிருந்து பிரிந்த ஓசன்சாட் செயற்கைக்கோள் அதன் வட்டப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை காலை 10.26 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சரியாக காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி - சி54 ராக்கெட் ஏவப்பட்டது. முதலில் ஓசன்சாட் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் அதனதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 2 மணி நேரத்தில் மொத்தமுள்ள 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

6-ம் தலைமுறை செயற்கைக்கோள்: இதில் இஓஎஸ் 6 என்பது ஓசன்சாட் வகையறா செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1,117 கிலோ எடை கொண்டது. இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்.

இதுதவிர ஐன்எஸ்-2பி செயற்கைக் கோள் இந்தியா - பூடான் ஆகிய நாடுகளின் கூட்டிணைப்பில் தயாரிக்கப்பட்டது. கடந்த 2019-ல்பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பூடான் சென்றபோது, இரு நாடுகள் இடையே செயற்கைக் கோள் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் தற்போது ஐஎன்எஸ்-2பி செயற்கைக் கோள் ஏவப்படுள்ளது. இது பூடானை வலம்வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இஓஎஸ்-06 உடன் ஏவப்பட்ட பிற செயற்கைக்கோள்கள் என்னென்ன? - இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 என்ற நவீன செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4), துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2) மற்றும் ஐஎன்எஸ்-2பி, பிக்சல் நிறுவனத்தின் ஆனந்த் என 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x