Published : 26 Nov 2022 09:54 AM
Last Updated : 26 Nov 2022 09:54 AM
புதுடெல்லி: ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல. அதற்கு கொலீஜியமும் விதிவிலக்கல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தை ஒட்டி டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பார் கூட்டமைப்பு சார்ப்பில் விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்லது. அதற்கு கொலீஜியம் முறை மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால் கருத்து வேறுபாடுகளோ, சிக்கல்களோ ஏற்படும்போது நாம் அந்த அமைப்புக்கு உட்பட்டே அதற்கு தீர்வு காண்பது அவசியம்.
நீதிபதிகள் அரசியல் சாசனத்தை அமல்படுத்தும் நேர்மையான வீரர்கள். கொலீஜியம் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதால் மட்டுமோ அல்லது நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதால் மட்டுமோ நீதித்துறைக்கு நல்லவர்களைக் கொண்டுவந்து விட முடியாது. நீங்கள் எவ்வளவு தான் உயர்ந்த சம்பளத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தாலும் மூத்த பிரபல வழக்கறிஞர்கள் ஒருநாள் சம்பாத்தியத்தில் அது ஒரு சிறு பகுதியாகத் தான் இருக்கும்.
அதையும் மீறி ஒரு வழக்கறிஞர் நீதிபதியாவது என்பது மனசாட்சியின் குரலுடன் இயைந்து போவது. மக்கள் சேவையில் அவருக்கு உள்ள அர்ப்பணிப்பு. கொலீஜியம் சர்ச்சைக்கான விடையெல்லாம் நாம் இளைஞர்களுக்கு எப்படி முன்மாதிரியாக திகழ்ந்து அவர்களின் நீதிபதி கனவிற்கு வித்திடுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. நீதிபதிகளின் ஓய்வுக் காலத்திற்குப் பின்னரும் கூட அவர்களிடமிருந்து பிரித்து எடுக்க முடியாத ஒன்று மனநிறைவு.
2020 மே மாதம் நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தேன். அப்போது எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதில், இந்திய கடற்படையின் பெண் கமாண்டர்கள், "நீங்கள் எங்களை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் நீங்கள் எங்களுக்காக செய்த நியாத்திற்காக உங்கள் நலன் வேண்டி பிரார்த்திக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர். அதுதான் ஒரு நீதிபதிக்குக் கிடைக்கக் கூட பெரிய நிம்மதி" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான மோதல் என்பது அர்த்தமற்றது. ஏனெனில் இரண்டுமே ஒரே அரசியல் சாசனத்தின் உருவாக்கங்கள். இந்திய நீதித்துறையின் சுதந்திரம் எவராலும் சீர்குலைக்க முடியாதபடி இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT