Last Updated : 25 Nov, 2022 05:22 AM

2  

Published : 25 Nov 2022 05:22 AM
Last Updated : 25 Nov 2022 05:22 AM

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் - இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து தனிப்படை போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில், ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியும்(37), அதில் பயணம் செய்த முகமது ஷரீக்கும்(24) காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக 7 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், முகமது ஷரீக்குடன் தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரிடமும் விசாரணை நடைபெறுகிறது. இதுதவிர, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ஷரீக்கின் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது

இந்நிலையில், மங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதிகம் அறியப்படாத இந்த புதிய அமைப்பின் பின்னணி குறித்து, தனிப்படை போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்து வருகின்ற‌னர்.

இதுகுறித்து கர்நாடக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் கூறியதாவது: இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. முகமது ஷரீக் படத்துடன், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், ‘எங்கள் (முஸ்லிம்) மீது வெளிப்படையான போர் அறிவிக் கப்பட்டு, கும்பல் கும்பலாக கொலைகள் நடந்துவருகின்றன‌.

எங்கள் மதத்தில் தலையிடும் அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எங்கள் மதத்தைச் சேர்ந்த அப்பாவிகள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறைகளில் வாடுகிறார்கள். நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம்.

எங்கள் சகோதரர் முகமது ஷரீக், மங்களூரு அருகேயுள்ள கத்ரி இந்து கோயில் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார். அவர் நோக்கம் நிறைவேறவில்லை என்றாலும், மத்திய, மாநில விசாரணை முகமைகள் எங்களைத் தேடுவதையே வெற்றியாகக் கருதுகிறோம்.

ஷரீக் தயாரித்த குண்டு முன்கூட்டியே வெடித்திருந்தாலும், எதிர்காலத்தில் இதைவிட தீவிரமான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்பதை நினைவூட்டுகிறோம். முகமது ஷரீக் கைதாகியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சி குறுகிய காலமே நீடிக்கும்' என்று எழுதப்பட்டுள்ளது.

கடிதத்தில் உள்ள அமைப்பின் பெயர் புதிதாக இருப்பதால், கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. எனவே, கடிதம் குறித்தும், அந்த அமைப்பு குறித்தும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அபாயக் கட்டத்தில் ஷ‌ரீக்?: இதனிடையே, ஷரீக் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘குக்கர் குண்டு வெடித்தபோதும், அதிலிருந்த டெட்டனேட்டர் வெடிக்கவில்லை. அது வெடித்து இருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

ஜெலட்டின் வெடிபொருள் வெடித்ததில், குக்கரின் மூடி ஷரீக்கின் தாடையையும், முகத்தையும் கடுமையாகத் தாக்கியது. இதில் அவரது வலது கண் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

உடலில் 45 சதவீத தீக்காயம் உள்ளது. குறிப்பாக, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. நச்சுப் புகை தாக்கியதால் நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, 8 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றன‌ர். ஷரீக் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவது தவறானது.

தொடர் சிகிச்சையால், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட 25 நாட்கள் வரை ஆகலாம். அதற்குப் பிறகே போலீஸார் விசாரணையைத் தொடங்குவார்கள்'' என்றனர்.

ஷரீக் மீது என்ஐஏ வழக்கு: இந்நிலையில், கடந்த ஆக. 15-ல் ஷிமோகாவில் குண்டு வெடிப்பு நடத்தி ஒத்திகை பார்த்ததாக முகமது ஷரீக்(24), மாஸ் அஹமது (22), சையத் யாசின் (22) ஆகியோர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுதவிர, செப்டம்பர் மாதம் தேசியக் கொடியை எரித்த வழக்கிலும் இந்த 3 பேர் மீதும் ஷிமோகா போலீஸார், பயங்கரவாத தடுப்புச் சட்டமான‌ ‘உபா' சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேசியக் கொடியை எரித்த வழக்கில் கைதாகி, ஷிமோகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாஸ் அஹமது, சையத் யாசின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x