Published : 22 Nov 2022 07:29 PM
Last Updated : 22 Nov 2022 07:29 PM

அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க தயார்: இந்திய ராணுவம்

உபேந்திர திவேதி

பூஞ்ச்: அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப். ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து உபேந்திர திவேதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதுதான் இந்தியாவின் இலக்கு என கடந்த அக்டோபர் 27ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உபேந்திர திவேதி, இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதை செய்து முடிக்கும்; ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

"ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நிலைமை மாறிவிட்டது. மக்கள் நலனுக்காக நிர்வாகம் முழுமையாக செயல்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்தின் நாட்கள் எஞ்சியுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 160 பயங்கரவாதிகள் ஊடுருவும் நோக்கில் உள்ளனர். அவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

எல்லையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக உள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், அவர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்றுவிடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

பாகிஸ்தான் போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்துகிறது. பல பகுதிகளில் சரக்குகளை நாங்கள் பிடித்துள்ளோம். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளாக மாறும் இளைஞர்களின் சராசரி வயது 20. எனவே, ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்து வருகிறது. கல்வி கற்க பல இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x