Published : 22 Nov 2022 06:38 PM
Last Updated : 22 Nov 2022 06:38 PM

ஆஸ்திரேலியாவுடனான தடையற்ற வர்த்தகத்தால் இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய வாய்ப்பு: பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

புதுடெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை அளிக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என அந்நாடு நம்பிக்கையுடன் உள்ளது. தற்போது, ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, பால் பொருட்கள், சர்க்கரை, ஒயின் உள்ளிட்ட பொருட்களை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கு இந்தியா 90% வரி விதிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடங்கும்போது வரி இன்றி இவற்றை ஏற்றுமதி செய்ய முடியும். இந்தியாவில் 130 கோடிக்கும் அதிக மக்கள் தொகை இருப்பதால், இந்திய சந்தையால் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பலன்பெற முடியும் என அந்நாடு கணித்துள்ளது.

இந்நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திடீர் உயர்வை அடைய முடியும் என தெரிவித்தார். இதேபோல், இந்திய மருந்து உற்பத்தித் துறை, ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஜவுளித்துறை, நகைக்கற்கள், நகைகள் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய தொழில் துறைக்குத் தேவையான மூலப் பொருட்கள் குறைந்த விலைக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் என்பதால், அவற்றைக் கொண்டு இங்கே தொழில்கள் நல்ல வளர்ச்சி காண முடியும் என்றும் புதிய நிறுவனங்கள் தோன்றும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அடுத்த 5-6 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 45-50 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ ஃபாரெல், ஆஸ்திரேலியா-இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கருத்து வேறுபாடு இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பலன்பெறவும் மேலும் முன்னேறவும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x