Published : 22 Nov 2022 12:12 PM
Last Updated : 22 Nov 2022 12:12 PM

டெல்லி மாநகராட்சி தேர்தல் | சீட் விற்பனை சர்ச்சையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ தாக்கப்பட்டதாக பாஜக வீடியோ

புதுடெல்லி: டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு சீட் வழங்கலாம் என்பதை பணத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி நிர்ணயம் செய்வதாக பாஜக நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் சீட் சர்ச்சையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் தொண்டர்களால் தாக்கப்படுவதாக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீட் பேர வாக்குவாதம் என்று கூறப்படும் வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு குலாப் சிங் யாதவ் அந்த இடத்தில் இருந்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த வீடியோ என்று எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்நிலையில் இதனைவைத்து பாஜக தீவிர அரசியலை ஆம் ஆத்மிக்கு எதிராக முன்னெடுத்துள்ளது.

டெல்லியில் குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றும் விவகாரம் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை முன்வைத்தே ஆம் ஆத்மி மாநகராட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள சூழலில் பாஜக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வடமேற்கு டெல்லியின் ரோகிணி டி வார்டில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட அக்கட்சியை சேர்ந்த பிந்து என்பவரிடம் ரூ.80 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ரகசிய வீடியோவை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த வீடியவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா, "நேர்மை அரசியல் நாடகம் ஆடும் கட்சியின் நிலைமை இதுதான். அந்தக் கட்சியின் தொண்டர்கள் எம்எல்ஏக்களைக் கூட விட்டுவைக்கவில்லை பாருங்கள். டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவிலும் இப்படியான காட்சிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

ரூ.80 லட்சம் பேரம்: டெல்லி ரோகிணி டி வார்டில் போட்டியிட ஆம் ஆத்மி பொறுப்பாளர்கள் பதானியா, புனித் கோயல் உள்ளிட்டோருடன் பேரம் பேசுவது போல் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. சீட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்பது பற்றியே அவர்கள் விவாதிக்கிறார்கள் என்று பாஜக கூறுகிறது. பல சலசலப்புகளுக்குப் பின்னர் சீட்டுக்கு ரூ.80 லட்சம் கேட்கிறார்க ஆம் ஆத்மி தேர்தல் பொறுப்பாளர்கள் என்றும் இவர்களே ஆம் ஆத்மி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் 5 பேர் குழுவுடன் தொடர்புடையவர்கள் எனவும் பாஜக குற்றஞ்சாட்டுகிறது. மேலும், பணம் அடிப்படையில் கொடுப்பதற்காக 110 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டு இருப்பது வீடியோ மூலம் தெளிவாகிறது என்றும் பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைக்கி

இந்த வீடியோவை ரகசியமாக எடுத்த நபரே "ஆம் ஆத்மியில் சீட்டுகள் விற்கப்படுகின்றன. இங்கே அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பில்லை. அவர்களைப் புறக்கணித்து விட்டு பணம் தருபவர்களுக்கு சீட் வழங்குகின்றனர். ஒரு சிலர் மட்டும் இதை செய்யவில்லை. கீழ்மட்டத்தில் இருந்து மேலிடம்வரை அனைவரும் சம்பந்தப்பட்டு உள்ளனர். துர்கேஷ் பதக் என்பவரிடம் நான் புகார் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் பாஜகவின் வாதமாக இருக்கிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி நிராகரித்துள்ளது. இது குறித்து அக்கட்சி எம்எல்ஏ. திலீப் பாண்டே, "அந்த வீடியோ நம்பகத்தன்மையற்றது. தோல்வி பயத்தில் பாஜக இதுபோன்ற போலி வீடியோக்களை பரப்பி வருகிறது" என்று கூறீயுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் குலாப் சிங் யாதவ், "நான் சத்வாலா காவல்நிலையத்தில் இருக்கிறேன். இங்கே பாஜக வேட்பாளர் இருக்கிறார். பாஜக நிர்வாகிகளும் உள்ளனர். என்னை தாக்கியது பாஜகவினர் தான். அவர்களைக் காப்பாற்றவே இப்போது காவல் நிலையத்திற்கு அவர்கள் வந்துள்ளனர். இதுவே அவர்களின் சதிக்கு சாட்சி. ஆம் ஆத்மியில் சீட் விற்பனை நடப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பாஜக முன்வைக்கிறது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x