Published : 22 Nov 2022 05:20 AM
Last Updated : 22 Nov 2022 05:20 AM

மங்களூருவில் ஆட்டோ குண்டு வெடிப்புக்கு முன்னதாக ஷிமோகாவில் ஒத்திகை பார்த்த ஷரீக் - என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

குக்கர் குண்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முகமது ஷரீக். (அடுத்த படம்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷரீக்.

பெங்களூரு / கோவை / உதகை / நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவத்துக்கு முன்பாக முகமது ஷரீக் தனது நண்பர்கள் 2 பேருடன் ஷிமோகாவில் குண்டை வெடித்துப் பார்த்து, ஒத்திகையில் ஈடுபட்டது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

மங்களூரு அருகே சாலையில் சென்ற ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்ததில், ஆட்டோ ஓட்டுநர், அதில் பயணித்த முகமது ஷரீக்(24) ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து குக்கர், பேட்டரிகள், சர்க்யூட் வயர்கள், சல்பரிக், பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

விசாரணையில், முகமது ஷரீக், உதகை, கோவையைச் சேர்ந்தவ‌ர்களின் ஆதார் எண் மற்றும் முகவரியைப் பயன்படுத்தி, சிம் கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் மங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``முகமது ஷரீக் மங்களூருவை அடுத்துள்ள தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர். ஐ.எஸ். போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் ஆதரவாளரான இவர், அப்துல் மதீல் டாஹா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சாவர்க்கர் படம் அவமதிக்கப்பட்ட வழக்கில் கைதான யாசின், மாஸ் ஆகியோர் இவரது நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமது ஷரீக்குக்கு கர்நாடகா மட்டுமின்றி, கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. எனவே, மைசூரு, பெங்களூரு, தீர்த்தஹள்ளி, ஷிமோகா ஆகிய இடங்களில் முகமது ஷரீக்கின் நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.

என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, ``குண்டுவெடிப்புக்கு காரணமான முகமது ஷரீக் 45 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பாக இணையத்தில் தகவல்களை தேடிப் படித்துள்ளார். `டெலிகிராம்' சமூக வலைதளத்தில் கிடைத்த பிடிஎஃப் ஃபைல் மூலமாக குக்கர் வெடிகுண்டைத் தயாரித்திருக்கிறார்.

மங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் தனது நண்பர்கள் யாசின், மாஸ் ஆகியோருடன், ஷிமோகாவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குண்டை வெடித்து சோதனை செய்துள்ளார். மேலும், ஐ.எஸ். அமைப்பினரைப் போல உடையணிந்து, வெடிக்கப் போகும் குண்டுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

இவருக்கு 2020-ல் பெங்களூருவில் நடந்த‌ கலவரம், மங்களூருவில் நடந்த வன்முறை ஆகியவற்றில் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது.

முகமது ஷரீக் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறார். கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்துக்கும், மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். ஏனெனில், முகமது ஷரீக் சர்வதேச‌ தீவிரவாத அமைப்பினரின் ஆதரவாளராக இயங்கியதுடன், அந்த அமைப்பைச் சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்துள்ளார்'' என்றனர்.

இந்நிலையில், முகமது ஷரீக் கோவையில் தங்கியிருந்ததும், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய சுரேந்திரன் என்பவர், அவருக்கு சிம்கார்டு வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

கோவையில் 3 நாட்கள்...: இதுகுறித்து கோவை மாநகர போலீஸார் கூறும்போது, "கடந்த செப்டம்பர் மாதம் கோவை வந்த ஷரீக், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதியில் 3 நாட்கள் தங்கியுள்ளார். அவருடன் சுரேந்திரனும் தங்கியிருந்துள்ளார்.

சுரேந்திரன் மூலம் சிம் கார்டு வாங்கிய ஷரீக், அதைப் பயன்படுத்தி பலரிடம் குண்டு வெடிப்புத் திட்டம் தொடர்பாக, ரகசியக் குறியீடுகள் மூலம் பேசியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் கோவையில் இருந்து மதுரைக்கும் சென்றுள்ளார். கோவையில் ஷரீக் யாரையாவது சந்தித்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

உதகை அருகேயுள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரன், ஏற்கெனவே கர்நாடகாவில் பணியாற்றியுள்ளார். மேலும், சில ஆண்டுகளாக சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இதற்கிடையே, ஒரு புகாருக்கு உள்ளாகி பள்ளியில் இருந்து சுரேந்திரன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது" என்றனர்.

இந்நிலையில், குந்தசப்பை கிராமத்துக்கு வந்து செல்வோரை உளவுப் பிரிவு போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக அந்த கிராமமே ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நாகர்கோவில் இளைஞரிடம்...: இந்நிலையில், ஷரீக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முழுவதும் கன்னியாகுமரி, நாகர்கோவில் என மாவட்டம் முழுவதும் வட மாநிலத்தவர் தங்கியுள்ள விடுதிகள், அவர்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலை, ஓட்டல்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

ஷரீக் தொடர்பு கொண்ட செல்போனை வைத்திருந்த நபர், கோட்டாறு அருகேயுள்ள கம்போளம் பகுதியில் உள்ள ஓர் விடுதியில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. நேற்று அதிகாலை அந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான்(22) என்பதும், நாகர்கோவிலில் உள்ள துரித உணவகத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந் துள்ளது.

அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்றும், ஷரீக்குடன் அவர் பேசுவதற்கு காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஷரீக், அஜிம் ரகுமானுக்கிடையே ஏற்கெனவே தொடர்பு இருந்ததா என்றும் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x