Published : 21 Nov 2022 11:38 AM
Last Updated : 21 Nov 2022 11:38 AM

நாங்களும் ஒரு நாள் குஜராத் மக்களின் மனங்களை வெல்வோம் - அரவிந்த் கேஜ்ரிவால்

பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் | படம்: ஷிவ் குமார் புஷ்பகர்

புதுடெல்லி: "நாங்களும் ஒரு நாள் குஜராத் மக்களின் மனங்களை வெல்லுவோம்" என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோல் என்ற இடத்தில் சாலையோர கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுகிழமை கேஜ்ரிவால் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்தக் கூட்டத்தில் சிலர் மோடி... மோடி என்று முழக்கம் எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் , "சில நண்பர்கள் கூட்டத்தில் மோடி மோடி என்று முழக்கமிடுகின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு பிடித்தமானவர்களை ஆதரித்து நீங்கள் முழக்கங்கள் எழுப்பலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள் கட்டப்போவது இந்த கேஜ்ரிவால்தான். நீங்கள் எவ்வளவு முழக்கங்கள் எழுப்பினாலும் உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்போவது இந்த கேஜ்ரிவால் தான்.

எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. உங்களுக்கு விருப்பமானவர்களை ஆதரித்து நீங்கள் முழக்கங்கள் எழுப்பலாம். ஒருநாள் நாங்கள் உங்களின் மனதினை வென்று, உங்களை எங்கள் கட்சிக்கு அழைத்து வருவோம். எந்த ஒரு கட்சியும் பள்ளிக்கூடங்களை பற்றி பேசுவது இல்லை. எந்த ஒரு கட்சியாவது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டுவது, வேலைவாய்ப்பு, இலவச மின்சாரம் பற்றி பேசுகிறார்களா? எங்கள் கட்சி மட்டும் தான் இந்த பிரச்சினைகள் குறித்து பேசுகின்றது.

நீங்கள் பள்ளிக்கூடங்கள் கட்டப்படுவதை விரும்பினால் என்னுடன் வாருங்கள் நான் ஒரு பொறியாளர். உங்களுக்கு மின்சாரம் மருத்துவமனை, சாலைவசதிகள் தேவை என்றால் என்னுடன் வாருங்கள். வன்முறையை விரும்புகிறீர்கள் என்றால் அவர்களுடன் செல்லுங்கள்.

நான் உங்களிடம் கேட்பது 5 ஆண்டுகள் மட்டுமே. நீங்கள் அவர்களுக்கு 27 ஆண்டுகளை வழங்கியிருக்கிறீர்கள். எனக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள். நான் சொன்தைச் செய்யவில்லையென்றால் மீண்டும் உங்களிடம் திரும்ப வரமாட்டேன் என்று கேஜ்ரிவால் பேசினார்.

டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் முதல்முறையாக போட்டியிடுகிறது. குஜராத்தின் ஆளும் பாஜக அரசுக்கு தன்னை நேரடி போட்டியாக கருதும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x