Published : 20 Nov 2022 07:35 PM
Last Updated : 20 Nov 2022 07:35 PM

3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் 67% சரிவு: ஆர்டிஐ தகவல்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயானாளிகள் எண்ணிக்கை 67% சரிந்துள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. 2019 தேர்தலுக்கு முன்னர் பாஜக தான் அறிவித்த மெகா திட்டமாக பறைசாற்றிக் கொண்ட திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டின் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ 2,000 வீதம் என, மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) கீழ், 11வது தவணை பெற்றவர்கள் எண்ணிக்கை 67% சரிந்துள்ளதாக தெரிகிறது. வேளாண் துறை அமைச்சகம் ஆர்டிஐ மனுவுக்கு அளித்த பதிலின்படி இது தெரியவந்துள்ளது. சமூக செயற்பாட்டாளர் கண்ணய்யா குமார் தான் இந்த ஆர்டிஐ மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பிஎம் கிசான் திட்டத்தின் 11வது தவணையை 3.87 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர். மே 2022 முதல் ஜூன் 2022 வரையிலான காலகட்டத்தில் இது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2019ல் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடியாக இருந்தது. இது 2019 மக்களவை தேர்தலுக்கு முந்தைய நிலவரம். அண்மையில் வழங்கப்பட்ட 12வது தவணையில் பயனாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் சரிந்துள்ளது.

இந்த சரிவு 6வது தவணையில் இருந்து ஆரம்பித்துள்ளது. 6வது தவணையை 9.87 கோடி விவசாயிகள் பெற்றனர். அதன் பின்னர் 7, 8, 9, 10வது தவணைகளை முறையே 9.30, 8.59, 7.66 மற்றும் 6.34 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர்.

அமைச்சகம் விளக்கம்: இந்நிலையில் இது தொடர்பாக வேளாண் அமைச்சகம் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளது. ஏன் இந்த சரிவு என்றும் குறிப்பிட்டுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி ஆந்திரப் பிரதேசத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 55.68 லட்சத்தில் இருந்து 28.2 லட்சமாகக் குறைந்துள்ளது. பிஹாரில் பயனாளிகள் எண்ணிக்கை 83 லட்சமாக இருந்த எண்ணிக்கை 7 லட்சமாகக் குறைந்துள்ளது. சத்தீஸ்கரில் 11வது தவணையை 2 லட்சம் விவசாயிகள் பெற்றுள்ளனர். ஆனால் முதல் தவணையை 37 லட்சம் பேர் பெற்றனர்.

தேர்தலை சந்திக்கவுள்ள குஜராத்தில் 63.13 லட்சம் விவசாயிகள் 2019லும், 2022ல் 28.41 லட்ச விவசாயிகளும் பெற்றனர். ஹரியாணாவில் 19.73 லட்சம் விவசாயிகள் முதல் தவணையில் பயனடைந்தனர். 11வது தவணையை 11.59 லட்ச விவசாயிகள் பெற்றனர்.

கடந்த அக்டோபரில் வழங்கப்பட்ட தவணையைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் 1.09 கோடி விவசாயிகள் மட்டுமே பெற்றனர். இது 2019ல் 37.51 லட்சமாக இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் 88.63 லட்சம் விவசாயிகள் 2019ல் பயனடைந்த நிலையில் தற்போது 12.05 லட்சம் பேர் மட்டுமே பெற்றுள்ளனர். பஞ்சாப்பில் 23.34 லட்சமாக இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை 2022ல் 11.31 லட்சமாக சரிந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 2.6 கோடி விவசாயிகள் பயனடைந்த நிலையில் இந்த ஆண்டு 1.26 கோடியாக குறைந்துள்ளது. மேற்குவங்கத்தில் 2019ல் 45.63 லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில். 2022ஆம் ஆண்டுக்கான தவணை அம்மாநில விவசாயிகளுக்கு இதுவரை விடுவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் 2019ல் 46.8 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். இந்நிலையில் இந்த அக்டோபரில் 23.04 லட்சம் விவசாயிகளே பயனடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அனைத்திந்திய கிசான் சபா தலைவர் அசோக் தவாலே கூறுகையில், இந்து அதிர்ச்சியாக இருக்கிறது. 2022 புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது பாதியளவு விவசாயிகள் பயனடையவில்லை எனத் தெரிகிறது. இவ்வாறாக பயனாளிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு தர்க்க ரீதியாக எந்த காரணமும் தெரியவில்லை. இதைப் பார்க்கும் போது மத்திய அரசு மெல்ல மெல்ல இத்திட்டத்தை முடித்துக் கொள்ள நினைக்கிறதோ என்றே தோன்றுகிறது. இந்த திட்டத்தை குறைந்தபட்ச ஆதாரத் தொகைக்கான மாற்றாக நாங்கள் கருதவில்லை. இதனை விவசாயிகளின் உண்மையான பிரச்சினையை மூடிமறைக்க மத்திய அரசு செய்யும் மாயமந்திரமாகக் கருதுகிறோம் என்றார்.

ஆனால் மத்திய வேளாண் அமைச்சக வட்டாரமோ, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் யாரும் மோசடியாக சலுகை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துகிறோம். 100 சதவீதம் தவறே இல்லாத தரவுகள் வழங்கிய விவசாயிகளுக்கு அவர்களின் ஆதாரை பரிசோதித்து அதன் அடிப்படையில் உதவிகளை வழங்குகிறோம் என்று கூறியுள்ளது.

அண்மையில் வெளியான ஓர் அரசு அறிக்கையில், கடந்த 11 தவணைகளில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.2 லட்சம் கோடி. இதில் 1.6 லட்சம் கோடி ரூபாய் கரோனா பெருந்தொற்று காலத்தில் விடுவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 2.16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு வரவை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x