Published : 19 Nov 2022 07:09 PM
Last Updated : 19 Nov 2022 07:09 PM
புதுடெல்லி: பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி செய்வது மிகவும் ஆபத்தானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு நிதி உதவி மறுத்தல் எனும் தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம் புதுடெல்லியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் அமித் ஷா ஆற்றிய நிறைவுரை: பயங்கரவாதம் என்பது ஜனநாயகம், மனித உரிமை, பொருளாதார முன்னேற்றம், உலக அமைதி ஆகியவற்றுக்கு எதிரானது. பயங்கரவாதம் வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது. பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி அளிப்பது அதைவிட மிக மிக ஆபத்தானது. எனவே, பயங்கரவாதத்திற்கு நிதி உதவி மறுத்தலை சர்வதேச அளவில் உறுதி செய்ய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பயங்கரவாதத்திற்கு உதவி உதவி வழங்கும் விவகாரத்தை எதிர்கொள்ள அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பண மோசடி, டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகளை தவறாக பயன்படுத்துவது, ஹவாலா என பல்வேறு வழிகள் மூலம் பயங்கரவாதத்திற்கு பணம் செல்கிறது. இதை தடுக்க, பயங்கரவாதம் மற்றும் பொருளாதார குற்றங்கள் குறித்த தேசிய மற்றும் சர்வதேச தகவல்களைத் திரட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கிரிப்டோ கரண்சி போன்றவற்றின் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டப்படுகிறது. இதுபோன்ற கருப்புப் பக்கங்களையும் அது செயல்படும் விதங்களையும் நாம் கண்டறிந்து அவற்றை தடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு பண உதவி கிட்டுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. பயங்கரவாதிகளை பாதுகாப்பது என்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு நிகரானது. இதை சில நாடுகள் வேண்டுமென்றே செய்கின்றன என பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அமித் ஷா தெரிவித்தார்.
சில சக்திகள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசிக் கொண்டே, ஆதரவாக செயல்படும் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வதாகக் கூறி சீனாவை அவர் விமர்சித்தார். பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கும் போக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, இதைத் தடுக்க சர்வதேச நாடுகள் தோளோடு தோள் கோர்த்து பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT