Published : 19 Nov 2022 06:00 AM
Last Updated : 19 Nov 2022 06:00 AM
புதுடெல்லி: காஷ்மீர் செய்தியாளர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன. இதற்கு எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் பல்வேறு செய்தியாளர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் சார்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து முன்னணி நாளிதழின் ஆசிரியர் உட்பட 5 மூத்த செய்தியாளர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர்.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தமுக்தர் பாபா என்பவர் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் செய்தியாளராக பணியாற்றிய அவர், கடந்த1990-ம் ஆண்டில் ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பில் இணைந்ததால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் துருக்கிக்கு தப்பி சென்றுவிட்டார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அவர் காஷ்மீரின் மூத்த செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீவிரவாதிகளின் கொலை மிரட்டலால் இதுவரை 5 செய்தியாளர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர். ரைசிங் காஷ்மீர், கிரேட்டர் காஷ்மீர் ஆகிய நாளிதழ்களை துரோகிகள் என்று தீவிரவாத அமைப்புகள் விமர்சித்துள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டில் ரைசிங் காஷ்மீர் நாளிதழின் ஆசிரியர் ஷாஜத் புஹாரி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவர் உட்பட ஏராளமான செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள தீவிரவாத அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். செய்தியாளர்களின் பாதுகாப்பை மாநில அரசு, காவல் துறை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT