Published : 18 Nov 2022 01:46 PM
Last Updated : 18 Nov 2022 01:46 PM
ஷேகான், மகாராஷ்டிரா: மாகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இருந்து காலையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை சில மணி நேரங்கள் கழித்து ஷேகான் நகரை அடைந்தது. அப்போது மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார்.
முன்னதாக வியாழக்கிழமை துஷார் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜவஹர்லால் நேருவும், மகாத்மா காந்தியும் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, நாளை நான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஷேகானில் கலந்து கொள்வேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நவ.15ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் துஷார் காந்தி, "18ம் தேதி ஷேகான் பகுதியில் நடைபெற இருக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். ஷேகான் நான் பிறந்த இடம். 1960 ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி நாக்பூர் வழியாக செல்லும் 1 டிஎன் ஹவுரா மெயில் ரயிலில் என் அம்மா பயணம் செய்தார். அந்த ரயில் ஷேகான் நிறுத்தத்தில் நின்ற போது நான் பிறந்தேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் துஷார் காந்தி பங்கேற்றது வரலாற்று சிறப்புமிக்கது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி,"மறைந்த மாபெரும் தலைவர்களான ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்களான துஷார் காந்தி, ராகுல் காந்தி அந்த தலைவர்களின் பாரம்பரியத்தினை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து நடந்து செல்வது ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியை கடத்துகிறது. அது ஜனநாயகத்தை ஆட்சியாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கலாம். ஆனால் அவர்களால் அதனை அழிக்கமுடியாது என்பதனை உணர்த்தும்" என்று தெரிவித்துள்ளது.
கடந்த செப் 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா வழியாக நவ.7ம் தேதி மகாராஷ்டிராவிற்குள் நுழைந்தது. இந்த யாத்திரை நவ.20 ம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு செல்கிறது.
Tomorrow I join Rahul Gandhi and walk in the Bharat Jodo Yatra at Shegaon. pic.twitter.com/0yRSgS8ruR
— Tushar (@TusharG) November 17, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT