Published : 18 Nov 2022 11:52 AM
Last Updated : 18 Nov 2022 11:52 AM

சாவர்க்கர் குறித்து கருத்து | ராகுல் காந்தி மீது தானே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

ராகுல் காந்தி | கோப்புப்படம்

தானே: சுதந்திர போராட்ட வீரர் வி.டி.சாவர்க்கர் குறித்து இழிவான முறையில் கருத்துகள் கூறியதாக காங்கிரஸின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தானே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலாசாஹேப்பாஞ்சி சிவசேனா பிரமுகர் வந்தனா டோங்ரே என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்து உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்திவிட்டது என்ற புகாரின் பேரில் தானே நகர் காவல் நிலையத்தில், ஐபிசி 500, 501 ஆகி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராகுல்காந்தி மீது புகார் அளித்த பாலாசாஹேப் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும், அக்கட்சியின் மகிளா அகாதி கூட்டணியின் தலைவருமான வந்தனா டோங்ரே கூறுகையில்,"இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து உள்ளூர் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மண்ணின் மகத்தான மனிதரை இழிவுபடுத்துவதை நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.

பாலாசாஹேப் சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளரும், மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளருமான நரேஷ் மஸ்கே, "ராகுல் காந்தியின் கருத்திற்காக காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து புகாரின் பெயரில் ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்," ராகுல் காந்தி வீர் சாவர்க்கரை அவமானப்படுத்தி விட்டார். சாவர்க்கர் நாட்டின் பெருமைகளில் ஒருவர். அவரைப்பற்றி ராகுல் காந்தி கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சாவர்க்கர் எங்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட சாவர்க்கரை பிரிட்டிஷாருக்கு எதிராக போராடிய சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் என்று கூறிப்பிட்டுள்ளார். தற்போது இந்திரா காந்தி, ராகுல் காந்தி இருவரில் யார் பொய் சொல்லுகிறார்கள் என்று காந்தி குடும்பம் விளக்கம் அளிக்க வேண்டும்.

காந்தி குடும்பத்தினர் மட்டுமே இந்திய சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களையும் அவமானபடுத்தியுள்ளனர்" என்று தெவிரித்தார்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை மகாராஷ்ட்டிராவின் வாஷிம் என்ற பகுதியில் மறைந்த பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய பிர்சா முண்டாவுக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு நிலங்களை வழங்க முன்வந்தபோதும், அவர் கீழ்படிய மறுத்தார். அவர் காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு முன் உதாரணமாக திகழ்பவர் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், வீர சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கீழ்படிந்து நடப்பதாக உறுதி அளித்து சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்றும் அவர், ஆங்கிலேயர்களுக்கு உதவியவர் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். அவர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தத்திற்கு உரியவர் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

இந்தகருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் அகோலா பகுதியில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் உள்ள ராகுல் காந்தி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வீர சாவர்க்கர் குறித்த தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ஆங்கிலேயர்களுக்கு வீர சாவர்க்கர் எழுதிய கடிதத்தின் நகலை அவர் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x