Published : 18 Nov 2022 06:50 AM
Last Updated : 18 Nov 2022 06:50 AM
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இது அம்மாநிலத்தில் அமையும் முதல் பசுமை விமான நிலையம் ஆகும்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அம்மாநிலத் தலைநகர் இடாநகரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மறுசூழற்சிப் பயன்பாடு என முற்றிலும் பசுமை முறையில் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணி 2020 டிசம்பரில் தொடங்கியது. ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டோனி என்றால் சூரியன் என்றும் போலோ என்றால் சந்திரன் என்றும் அர்த்தம். அருணாச்சலப் பிரதேசத்தின் செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விமான நிலையம் மூலம் அருணாச்சலப் பிரதேசத்தின் வர்த்தகமும் சுற்றுலாத்துறையும் மேலும் வளர்ச்சி அடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT