Published : 18 Nov 2022 04:55 AM
Last Updated : 18 Nov 2022 04:55 AM
புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
பின்னர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஆளுநர் உத்தரவிட்டார். கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. கடந்த மே 18-ம் தேதி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது ஷரத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் குமார் சர்மா, இது தொடர்பான மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் "வழக்கு விசாரணையின்போது மத்திய அரசை பிரதிவாதியாக சேர்க்கவில்லை. மத்திய அரசின் கருத்தையும் கேட்கவில்லை. பேரறிவாளன் வழக்கு விவகாரம், விடுதலை செய்யப்பட்ட 6 பேருக்குப் பொருந்தாது. எனவே, கடந்த 11-ம் தேதி வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று மத்திய அரசு கோரியுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT