Last Updated : 02 Nov, 2016 02:43 PM

 

Published : 02 Nov 2016 02:43 PM
Last Updated : 02 Nov 2016 02:43 PM

சிமி தீவிரவாதிகளிடம் துப்பாக்கிகள் இல்லை: என்கவுன்ட்டரை விவரிக்கும் நேரடி சாட்சிகள்

போபாலில் 'சிமி' தீவிரவாதிகள் 'என்கவுன்ட்டர்' எப்படி நடந்தது என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசிகள் சாட்சியம் கூறியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேரும் ஒரு சில மணி நேரங்களிலேயே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் பலவும், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அந்தச் சம்பவத்தை கிராமவாசிகள் பலரும் நேரில் பார்த்துள்ளனர்.

'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர்களில் பலர் சம்பவம் தொடர்பாக தகவல்களை பகிர்ந்துள்ளனர். கிராமவாசிகள் கூற்றின்படி என்கவுன்ட்டர் நடந்தபோது சிமி தீவிரவாதிகள், போலீஸாருக்கு எதிராக துப்பாக்கி பயன்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

போபால் மத்திய சிறையில் சிமி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறைக்காவலரின் குடும்பத்துக்கு முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்த நிலையில், கிராமவாசிகளின் இந்த சாட்சியம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள சிலர், "சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள், போலீஸார் மீது கற்களை வீசினர், சபித்தனர், சில முழக்கங்களை எழுப்பினர், தாக்கிவிடுவோம் என அச்சுறுத்தினர்; ஆனால், அவர்கள் போலீஸாருக்கு எதிராக துப்பாக்கி பயன்படுத்தவில்லை" என்றனர். இறந்துகிடந்த தீவிரவாதிகள் அருகில் கத்தி கிடந்ததாக சிலர் கூறினர்.

அச்சர்புரா கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் பாதுகாவலர் ராம்குமார் சோனி கூறும்போது, "சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்தப் பகுதியில் 8 பேரை பார்த்தீர்களா என போலீஸார் என்னிடம் விசாரித்தனர். அப்போது எனக்கு ஏதும் தெரியாது என்றேன். ஆனால், சிறிது நேரத்தில் கிராமவாசிகள் சந்தேக நபர்கள் உலவுவதாகக் கூறினர். இதனையடுத்து போலீஸாரிடம் தகவல் கூறினேன். போலீஸார் உடனடியாக வாகனங்களில் விரைந்தனர். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வாகனத்தை நிறுத்துவிட்டு நடந்தே முன்னேறிச் சென்றனர். பின்னர் ஒரு இடத்தில் சந்தேக நபர்களை சுற்றி வளைத்தனர். 8 பேரும் தப்பிக்க வழியேதுமில்லாமல் மாட்டிக் கொண்டனர். முதலில் போலீஸாரே துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்றார்.

பப்பு மீனா என்ற விவசாயி கூறும்போது, "என்கவுன்ட்டர் நடந்த இடத்தின் அருகில் தான் எனது குடிசை இருக்கிறது. நான் பார்க்கும்போது போலீஸாரே சுட்டுக்கொண்டிருந்தனர். தீவிரவாதிகளிடம் துப்பாக்கி இல்லை. அவர்களில் சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசினர். போலீஸார் எங்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்" என்றார்.

இதேபோல் மற்றொரு விவசாயி மனோஜ் கூறும்போது, "நான் எனது விவசாய நிலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த போலீஸார் சிலர் அருகிலிருக்கும் மலையடிவாரத்துக்கு வழி கேட்டனர். மேலும், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இவ்வழியாக வந்தனரா என்று விசாரித்தனர். நான் அப்படி யாரையும் பார்க்காததால் போலீஸாரை மலையடிவாரத்துக்கு அழைத்துச் சென்றேன். ஒரு குன்றின் மீது சிலர் நின்றிருந்ததை கவனித்தோம். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் கற்களை வீசினர். உடனடியாக என்னை கீழே படுத்துக் கொள்ளுமாறு போலீஸார் கூறினர். நானும் அவ்வாறே செய்தேன். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்கினர். ஆனால், குன்றின் மீது நின்றிருந்தவர்கள் துப்பாக்கி பயன்படுத்தவில்லை" என்றார்.

மனோஜ் போலவே கிராமவாசிகள் பலரும் சிமி தீவிரவாதிகளிடம் துப்பாக்கி இல்லை. அவர்கள் தப்பிப்பதற்கு எந்த வழியும் இல்லாமல் இருந்தது என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x