Published : 17 Nov 2022 09:30 PM
Last Updated : 17 Nov 2022 09:30 PM
புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கான சதித் திட்டத்தில் பங்குபெற்ற குற்றத்துக்காக 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தால் நவம்பர் 11 அன்று விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பேரறிவாளனின் விடுதலைக்கு மே 18 அன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இப்போது அந்தப் பயனை அதே வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறருக்கும் அளித்தது.
இந்த நிலையில், ‘இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பை நேரடியாக எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த பின்னரும், மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் உரிய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை தவறு, சிக்கலால் மத்திய அரசால் ஒரு தரப்பாக வழக்கில் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக உரிய வாதத்தையும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முடியவில்லை.
அதேபோல், வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்காத காரணத்தால்தான், அது தொடர்பான முக்கியமான ஆதார, ஆவணங்களை வாதமாக எடுத்து வைக்க இயலாமல் போனது. மத்திய அரசு தன் தரப்பு வாதத்தை எடுத்துவைக்காத காரணத்தால்தான் இந்த 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என சீராய்வு மனுவில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்கின் பின்புலம்: 1991 மே 21-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, பேரறிவாளன் உள்பட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.
பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் வேண்டுகோளை ஏற்று, நளினியின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து அப்போதைய ஆளுநர் உத்தரவிட்டார். அதேபோல, 2014-ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 2014 பிப்.14-ம் தேதி முடிவெடுத்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது ஷரத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே 18-ம் தேதி தீர்ப்பளித்தது. இதேபோல தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது.
மேலும், “பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு இந்த 6 பேருக்கும் பொருந்தும். சிறையில் 6 பேரின் நன்னடத்தை, அங்கு பயின்ற கல்வி, பரோல் விதிமுறைகள், மருத்துவ ஆவணங்கள், ஆளுநர் ஏற்படுத்திய தாமதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த தீர்ப்பை வழங்குகிறோம்" என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT