Published : 17 Nov 2022 07:31 PM
Last Updated : 17 Nov 2022 07:31 PM

‘ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்தான் சாவர்க்கர்’ - கடிதத்தை காட்டிய ராகுல்; கருத்தை ஏற்காத உத்தவ்

கடித ஆதாரத்தைக் காண்பிக்கும் ராகுல் காந்தி

அகோலா(மகாராஷ்ட்ரா): ஆங்கிலேயர்களுக்கு உதவியவர் வீர சாவர்க்கர் என்று விமர்சித்த ராகுல் காந்தி, அதற்கு ஆதாரமாக ஆங்கிலேயர்களுக்கு வீர சாவர்க்கர் எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.மறைந்த பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவுநாளை முன்னிட்டு, மகாராஷ்ட்டிராவின் வாஷிம் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய பிர்சா முண்டாவுக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு நிலங்களை வழங்க முன்வந்தபோதும், அவர் கீழ்படிய மறுத்ததாக ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார். அவர் காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு முன் உதாரணமாக திகழ்பவர் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், வீர சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கீழ்படிந்து நடப்பதாக உறுதி அளித்து சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்றும் அவர், ஆங்கிலேயர்களுக்கு உதவியவர் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். அவர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தத்திற்கு உரியவர் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

ராகுலின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. பாஜகவை சேர்ந்த மகாராஷ்ட்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், திரிக்கப்பட்ட வரலாற்றை ராகுல் காந்தி பரப்புவதாகவும், அவரது கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவ சேனா கட்சியினர் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, வீர் சாவர்க்கர் குறித்த ராகுலின் பேச்சை தாங்கள் ஏற்கவில்லை என காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வீர சாவர்க்கர் மீது தங்களுக்கு மிகுந்த மதிப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பால் தாக்கரேவின் இந்துத்துவ அரசியலை உத்தவ் பின்பற்றவில்லை என்ற பாஜகவின் விமர்சனத்தை மறுத்துள்ள அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி கட்சியுடன் பாஜக ஏன் கூட்டணி வைத்தது என கேள்வி எழுப்பினார். ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாக்கவே தாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்ட்டிராவின் அகோலா பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, வீர சாவர்க்கர் குறித்த தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ஆங்கிலேயர்களுக்கு வீர சாவர்க்கர் எழுதிய கடிதத்தின் நகலை அவர் வெளியிட்டார்.

அந்தக் கடிதத்தில் சாவர்க்கர் கையெழுத்திட்டதற்குக் காரணம், அவருக்கு இருந்த அச்சம்தான் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறை தண்டனை அனுபவித்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் ஒருபோதும் இதுபோன்று கடிதம் எழுதியதில்லை என்றும் ராகுல் குறிப்பிட்டார். இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x