Published : 17 Nov 2022 04:05 PM
Last Updated : 17 Nov 2022 04:05 PM
மும்பை: வீர் சாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காட்டமாக தெரிவித்துள்ளார். சாவர்க்கர் நினைவிடத்தில் இந்துத்துவா கருத்தரங்கில் பேசிய ஏக்நாத் ஷிண்டே இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்தபோது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்றும், பின்னாளில் பிரிட்டிஷ்காரர்களுடன் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டார் என்பதும் ராகுல் காந்தி தொடர்ச்சியாக முன்வைத்து வரும் விமர்சனத்தை ஒட்டி ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்திரை) மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "அந்தமான் சிறையில், சாவர்க்கர் ஒரு கடிதம் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அவர் எழுதிய மன்னிப்புக் கடிதம் அது. அந்தக் கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார். பின்னர் வீர் சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார். சிறையில் இருந்து வந்தபின்னர் அவர் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார்.
வீர் சாவர்க்கருக்கும், பிர்ஸா முண்டாவிற்கும் வித்தியாசம் இருக்கிறது. 24 வயதிலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போரிட்டவர் தான் நம் பிர்ஸா முண்டா. அவருடைய கொள்கைகளை இன்று பாஜகவும் ஆர்எஸ்எஸும் எதிர்க்கின்றன. பாஜக பழங்குடியின மக்களை ஆதிவாசி என்பதற்குப் பதிலாக வனவாசி என்று அழைப்பதன் பின்னணியில் ஒரு திட்டமிருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்தால் பழங்குடிகளுக்கான நிறைய சலுகைகள் பறிபோயுள்ளன" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில்தான் வீர் சாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ளாது என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவுக்கும் கண்டனம்: தொடர்ந்து பேசிய ஷிண்டே, "மகாராஷ்டிராவின் அடையாளமான வீர் சாவர்க்கர் தொடர்ந்து அவமதிக்கப்படுவதை உத்தவ் தாக்கரே வேடிக்கை பார்க்கிறார். காங்கிரஸ் கட்சி மீது அவர் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார். வீர் சாவர்க்கரை 'மாஃபிவீர்' என்று இகழ்கின்றனர். மன்னிப்புக் கடிதம் எழுதிய மாஃபிவீர் என்று சாவர்க்கர் அவமதிக்கப்படுவதை கூட்டணிக்காக வேடிக்கை பார்க்கிறார் உத்தவ் தாக்கரே" என்றார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய சிவசேனா எம்.பி. ராகுல் ஷிவாலே, "மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கும் மகாராஷ்டிராவின் மாண்புமிகு சாவர்க்கர் மீது எந்த மரியாதையும் இல்லை. அதனால் அவர்கள் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
ராகுல் காந்தி கடந்த செப்.7-ஆம் தேதி மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா வழியாக பயணப்பட்டு தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு தொடர்ந்து யாத்திரையை நடத்த இயலாது அளவிற்கு ஆளுங்கட்சி எதிர்ப்புக் குரலை கொடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT