Published : 17 Nov 2022 09:07 AM
Last Updated : 17 Nov 2022 09:07 AM
மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார் வி.டி.சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர். ராகுல் காந்தி தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்கரை அவமதிப்பதால் போலீஸில் புகார் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "2017ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து எனது தாத்தாவை அவமதித்து வருகிறார். வீர் சாவர்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் சாவர்கரை அவமதிப்பதையும் அதற்காகவே செய்கிறது" என்றார்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின தலைவர் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி ஜன் ஜாதிய கவுரவ் திவஸ் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். ஹிங்கோலியில் நடந்த அந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, "அந்தமான் சிறையில், சாவர்கார் ஒரு கடிதம் எழுதினார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அவர் எழுதிய மன்னிப்புக் கடிதம் அது. அந்தக் கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார். பின்னர் வீர் சாவர்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார். சிறையில் இருந்து வந்தபின்னர் அவர் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார்.
வீர் சாவர்கருக்கும், பிர்ஸா முண்டாவிற்கும் வித்தியாசம் இருக்கிறது. 24 வயதிலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போரிட்டவர் தான் நம் பிர்ஸா முண்டா. அவருடை கொள்கைகளை இன்று பாஜகவும் ஆர்எஸ்எஸும் எதிர்க்கின்றன. பாஜக பழங்குடியின மக்களை ஆதிவாசி என்பதற்குப் பதிலாக வனவாசி என்று அழைப்பதன் பின்னணியில் ஒரு திட்டமிருக்கிறது. இந்த பெயர் மாற்றத்தால் பழங்குடிகளுக்கான நிறைய சலுகைகள் பறிபோயுள்ளன.
பாஜக அரசு தொடர்ச்சியாக அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் அம்பேத்கரால் எழுதப்பட்டது அரசியல் சாசனம். அப்போதே பாஜக அரசியல் சாசனம் வேண்டாம் என்றுதான் சொன்னது. அப்போதிருந்தே பாஜக அரசியல் சாசனத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது" என்றார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்திரை) மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT